அகோங் கூறியதை, வான் அஸிஸா வெளிபடுத்தியது முறையல்ல

14-வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர், மாட்சிமை தங்கிய மாமன்னர், சுல்தான் முகமட் V, தன்னைப் பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுகொண்டார் எனும் தகவலை, துணைப் பிரதமர் டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயில் வெளிப்படுத்தியது முறையல்ல என்று ‘ஹிஸ்பா’ இயக்கத்தின் தலைவர் எஸாம் முகமட் நோர் தெரிவித்தார்.

“அரண்மனையில் அவர்கள் இருவருக்கும் இடையில் நடந்த உரையாடலை வெளியிட்டது முறையல்ல,” என ஜாகர்த்தாவில் இருக்கும் அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

“ஒரு துணைப் பிரதமரைப் போல் மதிக்கப்பட வேண்டுமானால், அதுபோல பணியாற்ற வேண்டும், பேச வேண்டும்.

“துணைப் பிரதமரின் பணி பிரதமருக்கு உதவியாக இருப்பது. ஆங்காங்கே சென்று தனக்கு பிரதமர் பதவி வழங்கப்பட்டது என்று அம்பலப்படுத்துவது அல்ல,” என்றார் அவர்.