ஜாஹிட் 5-வது முறையாக எம்ஏசிசி வந்தார்

முன்னாள் துணைப் பிரதமரும் அம்னோ தேசியத் தலைவருமான ஜாஹிட் ஹமிடி, இன்று காலை காலை ஐந்தாவது முறையாக புத்ரா ஜெயாவிலுள்ள ஊழல்-தடுப்பு ஆணையத் தலைமையகம் வந்தார்.

வெண்ணிற சட்டை அணிந்து வெண்ணிற லெக்சஸ் காரில் காலை மணி 9.20 அளவில் அவர் எம்ஏசிசி தலைமையகம் வந்தடைந்தார்.

அமைதியாக, புன்னகை பூத்த முகத்துடன் காட்சி தந்த அவர் அவரது வருகைக்காகக் காத்திருந்த அதிகாரிகளுடன் கைகுலுக்கினார்.

ஜாஹிட் தொடர்ந்து மூன்று நாள்களாக எம்ஏசிசி வந்து கொண்டிருக்கிறார்.

முன்னதாக, எம்ஏசிசி மூத்த விசாரணையாளர் ஒருவர் அதிகார மீறலுக்காகவும் நம்பிக்கை மோசடிக்காகவும் ஹமிடிமீது விசாரணை நடப்பதாகக் கூறினார்.

இந்த விசாரணைக்கும் அக்கால் பூடி அறவாரிய நிதிக் கையாடலுக்கும் அல்லது முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் வங்கிக் கணக்கில் காணப்பட்ட ரிம2.6 பில்லியன் சவூதி அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரின் நன்கொடை என்று கூறப்படுவதற்கும் தொடர்புண்டா என்பதைக் கூற அவர் மறுத்தார்.

கடந்த இரண்டு நாள்களில் ஒன்பது மணி நேரத்துக்குமேல் எம்ஏசிசி அதிகாரிகள் துருவித் துருவி விசாரித்துள்ளனர்.

இதற்குமுன் ஜூலை மாதமும் ஜாஹிட் இரண்டு தடவை விசாரணைக்கு அழைக்கப்பட்டார்.