அரசாங்கப் பள்ளிகளில் தங்களைப் பதிந்துகொள்ள விரும்பும் குடியுரிமை இல்லாத மாணவர்களுக்கு அதற்கான வழிமுறைகள் எளிமைப்படுத்தப்படும் என்று கல்வி துணை அமைச்சர் தியோ நை சிங் கூறினார்.
கடந்த வாரம் நடந்த ஒரு கூட்டத்தில், அமைச்சு குடியுரிமை இல்லாத பிள்ளைகள் அவர்களின் பிறப்புச் சான்றிதழ், சுவீகார பத்திரங்கள் அல்லது நீதிமன்ற ஆணை போன்றவற்றை காண்பித்தால் போதும் அரசாங்கப் பள்ளிகளில் தங்களைப் பதிந்து கொள்ளலாம் என்று முடிவு செய்ததாக அவர் சொன்னார்.
“இந்த ஆவணங்கள் இல்லையென்றால் சமூகத் தலைவர்கள் அல்லது மக்கள் பிரதிநிதிகளிடம் உறுதிக் கடிதங்கள் பெற்று வந்தால் போதும்”, என தியோ இன்று கூச்சிங்கில் கூறினார்.
குடியுரிமை இல்லாத பிள்ளைகளின் பெற்றோரில் ஒருவர் மலேசியராக இருந்து பிறப்புச் சான்றிதழும் இருக்குமானால் அவர்கள் அரசாங்கப் பள்ளிகளில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்றாரவர்.
இது வரும் ஜனவரியிலிருந்து நடைமுறைக்கு வருகிறது.
“அரசாங்கம் எல்லாக் குழந்தைகளுக்கும் முறையான கல்வி வழங்க எண்ணுகிறது. அதற்காகத்தான் இந்நடவடிக்கை”, என்றவர் கூறினார்.