தேர்தல் சீரமைப்புக் குழு(இஆர்சி)த் தலைவர் அப்துல் ரஷிட் அப்துல் ரஹமான், போர்ட் டிக்சன் இடைத் தேர்தல் பரப்புரைகளின்போது தற்காப்பு அமைச்சர் முகம்மட் சாபு, துணைப் பிரதமர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் உள்பட, பலர் தேர்தல் விதிமுறைகளை மீறியிருப்பதாகக் கூறினார்.
விதிமீறல்களில் அரசாங்க வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ளல், வாக்காளர்களுக்குப் பரிசு வழங்குதல் போன்றவை அடங்கும் என்றாரவர்.
இன்று போர்ட் டிக்சனில் செய்தியாளர்களிடம் பேசிய அப்துல் ரஷிட், இஆர்சி தேர்தல் சட்டங்களுக்குத் திருத்தங்களைப் பரிந்துரைக்கும்போது இவையெல்லாம் கவனத்தில் கொள்ளப்படும் என்றார்.
முகம்மட் சாபு போர்ட் டிக்சன் இராணுவ அரும்பொருள் காட்சியகத்துக்கு மேற்கொண்ட வருகை பற்றிக் கேட்டதற்கு, “ அவர் (போர்ட் டிக்சன் இடைத் தேர்தலுக்கு) முன்போ பின்னரோ அதைச் செய்திருக்க வேண்டும்”, என்றுரைத்தார்.
இராணுவத்தினரிடம் பேசிய முகம்மட் சாபு பிகேஆர் வேட்பாளர் அன்வார் இப்ராகிமுக்கு வாக்களித்தால் அவர்களின் நலன்கள் கவனித்துக் கொள்ளப்படும் என்று கூறி வெளிப்படையாகவே அன்வாருக்காக பிரச்சாரம் செய்திருக்கிறார்.
வான் அசிசாகூட அன்வாருக்காக பரப்புரை செய்திருக்கிறார்.
“எனக்கு அது சரியாகப் படவில்லை. அவரைத் தடுக்க சட்டம் ஏதுமில்லை. ஆனாலும், துணைப் பிரதமர் வருவது முறை அல்ல. அவர் திட்டங்கள் எதையும் அறிவிக்காதிருக்க வேண்டும்”,
வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் இலவச விருந்தளிப்பதும் தவறுதான் என்றவர் சொன்னார்.
அப்துல் ரஷிட் தேர்தல் ஆணைய முன்னாள் தலைவருமாவார்.