பிடி இடைத் தேர்தல்: அன்வார் முன்நிலையில், அடுத்து ஈசா

 

பிடி நாடாளுமன்ற இடைத் தேர்தல் குறித்து நடத்தப்பட்ட ஒரு மதிப்பீட்டில் அன்வார் இப்ராகிம் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு மிகப் பெரிதாகத் தெரிகிறது.

இல்ஹாம் மையம் போர்ட் டிக்சன் தொகுதியில் நடத்திய அந்த ஆய்வில் 817 பேர் பங்கேற்றனர். அந்த ஆய்வின் முடிவில்  அன்வார் முன்நிலையிலும் அதற்கு அடுத்து முகமட் ஈசாவும் வருகின்றனர். பாஸ் அதன் வைப்புத் தொகையை இழக்கலாம்.

அன்வாருக்கு மலாய்க்காரர்-அல்லாதவர்களின் ஆதரவு இருப்பது தெளிவாகத் தெரிகிறது. அந்த ஆய்வில் 64 விழுக்காட்டினர் அன்வாரை எம்பியாக தேர்வு செய்தனர் என்று இல்ஹாம் ஆய்வு மையத்தின் செயல்முறை இயக்குனர் அஸ்லான் சைனால் கூறினார்.

இந்த இடைத் தேர்தலில் அன்வாருக்காக பிரதமர் மகாதிர் பரப்புரை செய்தது அன்வாரின் வெற்றி வாய்ப்பை அதிகரித்துள்ளது என்று அஸ்லான் கூறினார்.

அந்த ஆய்வின்படி முன்னாள் நெகிரி செம்பிலான் மந்திரி பெசாரான முகமட் ஈசா அடுத்த நிலையில் அன்வாருக்கு மிக அருகில் இருக்கிறார். அவர் அம்னோ உறுப்பினராக இல்லாத போதிலும் அவரது செல்வாக்கு இன்னும் வலுவாகவே இருக்கிறது.

பாஸ் வேட்பாளர் முன்னாள் வான்படை அதிகாரி முகமட் நஸாரி மொக்தார் வெற்றி வாய்ப்பே இல்லை என்று கூறிய அஸ்லான், பெரும்பாலான பாஸ் உறுப்பினர்கள், குறிப்பாக தெலுக் கெமானில், கடந்த மூன்று ஆண்டுகளில் அமனாவில் சேர்ந்துள்ளனர் என்றார்.

இந்த ஆய்வின் அடிப்படையில், பாஸ் அதன் வைப்புத் தொகையை இழக்கக்கூடும்.

ஈசாவை தவிர்த்து, இதர நான்கு சுயேட்சை வேட்பாளர்களும், அன்வாரின் முன்னாள் உதவியாளர் சைபுல் புகாரி அஸ்லான் உட்பட, அவர்களின் வைப்புத் தொகையை இழப்பார்கள் என்று அஸ்லான் கூறினார்.

வாக்களிப்பவர்களின் எண்ணிக்கை 60 விழுக்காட்டை எட்டினால், அது அன்வாரின் வெற்றியை உறுதிசெய்யும் என்று அஸ்லான் மேலும் கூறினார்.