உலக அமைதி என்னும் ஆலமரத்திற்கு ஆணிவேராகத் திகழ்வது அடுத்தவரின் இருப்பை ஏற்றுக் கொள்வதுடன் அவர்களை மதிப்பதுமே ஆகும். மாந்த இனத்திற்குரிய இந்த உயர் பண்பு நிலை எங்கள் மக்களின் உள்ளத்தில் நிறைந்திருப்பதால்தான் மலேசியாவில் எப்பொழுதும் அமைதி தவழ்கிறது என்று தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி கசகஸ்தான் நாட்டில் கூறினார்.
கசகஸ்தான் நாட்டில் தற்பொழுது நடைபெறும் உலக – பாரம்பரிய சமய மாநாட்டில் கலந்து கொண்டிருக்கும் பிரதமர் துறை அமைச்சருமான அவர், அஸ்தானா நகரில் உள்ள மலேசியத் தூதரக அலுவலகத்தில், அந்த நாட்டின் தேசிய தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலின்போது மலேசியக் கூட்டு சமுதாயத்தின் பெருமையை மேற்கண்டவாறு எடுத்துரைத்தார்.
மற்றவரின் மொழியை மதிக்க வேண்டும்; அடுத்தவரின் சமய நெறியைப் போற்ற வேண்டும்; அவர்களின் பண்பாட்டு-கலாச்சாரக் கூறுகளையும் மதிக்கும் பண்பு ஒவ்வொரு மனிதரின் உள்ளத்திலும் கொலுவீற்றிருக்க வேண்டும். இந்தகைய மாந்தனேயத் தன்மைகள் மலேசிய மக்களிடத்தில் நிரம்பி இருப்பதால்தான், அரசியல் நிலைத்தன்மைக்கும் சமூக நல்லிணக்கத்திற்கு பெயர் பெற்ற நாடாக உலக அரங்கில் மலேசியா விளங்குகிறது என்று அந்த நேர்காணலின்போது பொன்.வேதமூர்த்தி எடுத்துரைத்தார்.
பில்கிஸ் பகாரி என்பாருக்கு அளித்த அந்த நேர்காணலின்போது, “உலக வரலாற்றை எடுத்துக் கொண்டால், பெரும்பான்மை இனமாக இருந்தாலும் அல்லது சிறுபான்மை இனமாக இருந்தாலும், எந்த இனம் மற்ற இனத்தை அங்கீகரிக்கவில்லையோ அல்லது ஏற்றுக்கொள்ள வில்லையோ அங்கெல்லாம் பூசலும் பிணக்கும் நிறைந்த முறுகல் நிலை தோன்றியுள்ளதை காலம் நமக்கு உணர்த்தி உள்ளது. இதற்கெல்லாம் ஒரேத் தீர்வு, இந்த பரந்த பூமியில் பிறந்த ஒவ்வொரு மனிதருக்கும் வாழும் வகையும் எதிர்காலமும் உண்டு என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்வதுதான்” என்று பொன்.வேதமூர்த்தி குறிப்பிட்டார்.
அமைதியையும் ஒருங்கிணைந்து வாழும் போக்கையும் எப்போதும் உயர்த்திப் பிடிக்கும் மக்கள் வாழும் மண்ணில் இருந்து, ‘உலக அமைதிக்காக, சமயத் தலைவர்கள்’ என்னும் கருப்பொருளுடன் நடைபெறும் இந்த ஆறாவது பன்னாட்டு சமய மாநாட்டில் கலந்து கொள்வதில் பெருமை கொள்ளும் அதேவேளை, இந்தகைய மாநாட்டை இரண்டாவது முறையாக நடத்தும் கசகஸ்தான் அரசிற்கு மலேசிய அரசாங்கத்தின் சார்பில் பாராட்டையும் நன்றியையும் ஒருங்கேத் தெரிவிக்கும் அதேவேளை, கசகஸ்தான் மக்களையும் வணங்கி மகிழ்வதாக பொன்.வேதமூர்த்தி அத்தொலைக்காட்சி நேர்காணலின்போது மேலும் சொன்னார்.
- நக்கீரன்