இன்று, முன்னாள் பிரதமர் நஜிப் இராசாகின் உதவியாளர் ஒருவர் டிஏபி மூத்தத் தலைவர் லிம் கிட் சியாங் மீது, கோலாலம்பூர் ஹர்தாமாஸ் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
“நான்…. கடந்த அக்டோபர் 8-ம் தேதி, லிம் கிட் சியாங் எழுதிய ஒரு கட்டுரையை மலேசியாகினியில் படித்தேன்.
“அக்கட்டுரையில், என் முதலாளி நஜிப்புடன் சம்பந்தப்படுத்தப்பட்ட, அல்தாந்துயா ஷரிபூ, கேவின் மோரைஸ், ஹுஸ்சாய்ன் நஜாடி, தியோ பெங் ஹோக் மற்றும் அஹ்மாட் சர்பைனி முகமட் ஆகியோரின் கொலை வழக்குகள் மீது மீண்டும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அவர் கூறியிருந்தார்.
மலேசியாகினி கட்டுரையின் அடிப்படையில், லிம் மீது போலிஸ் விசாரணை நடத்த வேண்டும் எனப் புகார்தாரர் கேட்டுக்கொண்டார்.
புகார்தாரரின் கூற்றுப்படி, இந்த வழக்குகள் அனைத்தும் விரிவாக விசாரிக்கப்பட்டு, நீதித்துறை செயல்முறை மூலம் ஆராயப்பட்டது. போலிஸ் லிம் மீதுதான் விசாரணை மேற்கொள்ள வேண்டும், காரணம் அவர்தான் மேலும் விசாரணை தேவை எனக் கேட்டுக் கொண்டுள்ளார் என அவர் கூறினார்.
“மேலும் விசாரணை தேவை என அவர் கூறுவது, அவரிடம் ஏதோ புதிய தகவல் இருப்பதுபோல் தெரிகிறது. ஆக, அவர் கொடுக்கும் கூடுதல் தகவல்களின் அடிப்படையில் போலிஸ் விசாரணை செய்ய வேண்டும்,” என்றார் அவர்.
“அவ்விசாரணையில், என் முதலாளிக்கு அக்கொலைகளில் தொடர்பில்லை எனத் தெரியவந்தால், அவர் பெயருக்கு ஏற்பட்ட கலங்கத்தைச் சுத்தம் செய்ய வேண்டுமென நான் காவல்துறையைக் கேட்டுக்கொள்கிறேன்.
“அதேசமயம், லிம் கிட் சியாங் குற்றச்சாட்டில் உண்மையில்லை, அதுவெறும் அரசியல் பொய் எனத் தெரியவந்தால், காவல்துறை அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் நான் கேட்டுக்கொள்கிறேன்,” என அவர் அப்புகாரில் கூறியுள்ளார்.