பாஸ் : அம்னோவை விட ஹராப்பான் இன்னும் பயங்கரமானது

பிடி இடைத்தேர்தல் | நாட்டை நிர்வாகம் செய்து ஆறு மாதங்களே ஆகியிருந்த போதும், அம்னோவுடன் ஒப்பிடுகையில், பக்காத்தான் ஹராப்பான் மிகவும் பயங்கரமானது என விவரிக்கப்பட்டுள்ளது.

இதற்குக் காரணம், வாக்களித்து தேர்ந்தெடுத்த மக்களிடம், ஹராப்பான் பொய் சொல்லியுள்ளது என, பாஸ் கட்சியின் மத்திய உலாமா துணைத் தலைவர் நிக் ஜவாவி நிக் முகமட் சாலே, இன்று போர்ட்டிக்சனில் நடந்த ‘செராமா’வில் பேசினார்.

அதுமட்டுமின்றி, நாட்டின் நிதி நிர்வாகத்திலும், ஹராப்பான் அம்னோவைவிட பயங்கரமானது என்பது தெரிகிறது என்றும் அவர் கூறினார்.

“ஹராப்பான் அம்னோ, பிஎன் –ஐ விட பயங்கரமானது. நிதித் துறையில் இன்னும் பயங்கரமானது… மக்கள் தைரியமாக அரசாங்கத்தை மாற்றி அமைத்தனர், ஆனால் அவர்கள் சற்று வழி தவறிவிட்டார்கள்,” என்றார் அவர்.

அதனால்தான், வெற்றி பெறுவது கடினம் என்று தெரிந்தும், பாஸ் பிடி-இல் வேட்பாளரை நிறுத்தியது என நிக் கூறினார்.

“போர்ட்டிக்சனில் பாஸ் வெற்றி பெற்றால், அரசாங்கத்தை மாற்ற முடியாது என்பது உண்மைதான். ஆனால், அவ்வெற்றி நாட்டிற்குப் புதிய அரசியல் பாடத்தைப் புகட்டும்.

“15-வது பொதுத் தேர்தலில் ஆட்சி கைமாறும், இல்லையேல் அதற்கும் முன்னதாகவே ஆட்சி மாற்றம் நடக்கும், ஹராப்பான் வீழும்,” என இன்றிரவு நடந்த பிடி இடைத்தேர்தலுக்கான இறுதி பிரச்சாரத்தின் போது அவர் பேசினார்.

தனது உரையின் போது, அரசாங்கத்தின் கடனைச் செலுத்துவதற்கு உதவும் வகையில், புதிய வரியைச் செயல்படுத்த வேண்டும் எனும் துன் டாக்டர் மகாதிரின் பரிந்துரை குறித்தும் நிக் ஜவாவி பேசினார்.