பிடி நாடாளுமன்ற இடைத் தேர்தல் வாக்களிப்பு இன்று மழைத் தூறலுடன் தொடங்கியது

 

பிடி நாடாளுமன்ற இடைத் தேர்தலுக்கான இரண்டு வார கால தேர்தல் பிரச்சாரம் நேற்றிரவோடு முடிவுற்றது.

இன்று காலை மணி 8 அளவில் வாக்களிப்பு தொடங்கியது.

இன்று நடைபெறும் வாக்களிப்பில் இத்தொகுதியின் வாக்காளர்களில் 70 விழுக்காட்டினர் வாக்களிப்பார்கள் என்று தேர்தல் ஆணையம் எதிர்பார்க்கிறது.

வாக்களிப்புக்கு 32 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த இடைத் தேர்தல் சுமுகமாக நடைபெறுவதை உறுதி செய்ய 1,403 தேர்தல் ஆணைய பணியாளர்களும் 800 போலீசாரும் கடமையில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம், முன்னாள் நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் முகமட் ஈசா, அன்வாரின் முன்னாள் உதவியாளர் முகமட் சைபுல் புகாரி அஸ்லான், பாஸ் கட்சியின் முகமட் நாஸாரி மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் ஸ்டெவி சான், லாவ் செக் யான் மற்றும் கான் சீ யுஎன் ஆகியோர் இத்தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

இத்தொகுதியில் 75,212 வாக்காளர்கள் இருக்கின்றனர். அவர்களில் 43 விழுக்காட்டினர் மலாய்க்காரர்கள், 33 விழுக்காட்டினர் சீனர்கள் மற்றும் 22 விழுக்காட்டினர் இந்தியர்கள்.

இந்த இடைத் தேர்தலில் அன்வார் இப்ராகிம் வெற்றி பெறுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்கு அடுத்த நிலையில் முகமட் ஈசா வருவார் என்று கூறப்படுகிறது.