எம்ஆர்டி பயனர்களுக்குப் போக்குவரத்து சேவைகளை வழங்க, மின் போக்குவரத்து (இ-ஹேய்லிங்) சேவை நிறுவனமான ‘கிராப்’-உடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்துவதை எதிர்ப்பதாக, ‘பிக் புளு டாக்ஸி ஃபெசிலிட்டிஸ்’ சென். பெர். (பிக் புளு டாக்ஸி) வாடகை கார் நிறுவனம் கூறியுள்ளது.
அந்நிறுவனத்தின் ஆலோசகர், ஷாம்சுபஹ்ரின் இஸ்மாயில், இந்நடவடிக்கை நியாயமற்றது மற்றும் மற்ற இ-ஹேய்லிங் சேவை வழங்குநர்களைக் கருத்தில் கொள்ளாமல், அரசாங்கம் கிராப்-ஐ மட்டும் ஊக்குவிப்பதை இத்திட்டம் வெளிப்படையாகக் காட்டுகிறது என்றார்.
இதன் அடிப்படையில், நிதியமைச்சரின் அரசியல் செயலாளர் டோனி புவா மற்றும் போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் இருவரும் பதவிவிலக வேண்டும் எனக் கேட்டு, அவரது தரப்பினர் ஒரு கவன ஈர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ளதாக ஷாம்சுபஹ்ரின் தெரிவித்தார்.
“நான் 3,000-க்கும் அதிகமான வாடகை கார் ஓட்டுநர்களுடன் புத்ராஜெயாவில் ஒரு கவன ஈர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்க உள்ளேன், பிரதமர், அந்தோனி லோக் மற்றும் டோனி புவா இருவரையும் பதவியிலிருந்து விலக்க வேண்டும்.
“இந்தப் பேச்சுவார்த்தையை நடத்த போவதாக அறிவித்த டோனி புவா மற்றும் கிராப் மீது கடுமையான சட்டங்களை விதிக்கத் தவறியப் போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் இருவரின் நடவடிக்கையும் வறுத்தமளிக்கிறது,” என இன்று, அம்பாங் சிலாங்கூரில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.
14-வது பொதுத் தேர்தலில், நாட்டிலுள்ள வாடகை கார் ஓட்டுநர்கள் பக்காத்தான் ஹராப்பானுக்கு தங்களின் முழு ஆதரவைத் தந்தார்கள் என அவர் மேலும் கூறினார்.
“எங்களில் யாரும் பிஎன் கொடியைப் பறக்கவிடவில்லை, பிஎன் சட்டையை அணியவில்லை, பிஎன் ஆதரவாளர்களைத் தவிர.
“ஆக, இப்போது ஹராப்பான் எங்களை ஏன் ‘கொல்ல’ நினைக்கிறது?” என அவர் கேள்வி எழுப்பினார்.
அடுத்த வாரம், புதன் அல்லது வியாழனன்று, புத்ரா ஜெயாவில், போக்குவரத்து அமைச்சு மற்றும் நிதியமைச்சு கட்டடத்திற்கு முன்புறம், இந்தக் கவன ஈர்ப்பு போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இப்போராட்டம் குறித்து காவல்துறைக்கும் அறிவிக்க உள்ளதாக ஷாம்சுபஹ்ரின் தெரிவித்தார்.
ஹராப்பான், பிஎன் தடத்தையேப் பின்பற்றுகிறது
வாடகைக் கார் ஓட்டுநர்களின் நலனைப் பாதுகாக்காமல், இ-ஹேய்லிங் சேவையை விளம்பரப்படுத்துவது, ஹராப்பானும் பிஎன் வழி தடத்தையேப் பின்பற்றுவதைக் காட்டுகிறது என்றார் அவர்.
“முன்னாள் போக்குவரத்து அமைச்சர், நேன்சி, முன்னர் ‘உபர்’-ஐ விளம்பரப்படுத்தினார், இப்போது கிராப்-ஐ விளம்பரப்படுத்துகிறார்கள். இது என்ன நியாயம்?” என அவர் கேள்வி எழுப்பினார்.
ஹராப்பான் மற்றும் அதன் உறுப்புக் கட்சிகள் மீது (பெர்சத்து தவிர்த்து) தனக்கு நம்பிக்கை போய்விட்டதாக அவர் மேலும் கூறினார்.
“இன்று, மலாய், முஸ்லிம் வாடகை கார் ஓட்டுநர்கள் பெர்சத்து கட்சியின் மீது மட்டுமே நம்பிக்கை வைக்க முடிகிறது.
“எங்களின் கடைசி நம்பிக்கை பெர்சத்து’தான். பெர்சத்து எங்களின் பிரச்சனையை உணர வேண்டுமென நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்,” என்றார் அவர்.