எதிர்பார்த்ததைவிட மிகப் பெரிய வெற்றி- அன்வார்

போர்ட் டிக்சன் எம்பி அன்வார் இப்ராகிம் நாடாளுமன்ற இடைத் தேர்தல் வெற்றியை எதிர்பார்த்ததைவிட மிகப் பெரிய வெற்றி என்று வர்ணித்துள்ளார்.

இந்த இடைத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணிக்கு 70 விழுக்காடு வாக்குகள் கிடைத்தன. 14வது பொதுத் தேர்தலில் கிடைத்தது 48 விடுக்காடுதான்.

மலாய்ப் பெரும்பான்மை, சீனர் பெரும்பான்மை, இந்தியர் பெரும்பான்மை உள்ள எல்லா இடங்களிலும் ஹரப்பான் வென்றிருப்பதாக அன்வார் கூறினார். ஓராங் அஸ்லி மக்களின் ஆதரவையும் மறப்பதற்கில்லை.

“போர்ட் டிக்சன் நாடாளுமன்றத் தொகுதியில் இரண்டு சட்டமன்ற இடங்களில் (பாகான் பினாங்கிலும் லிங்கியிலும்) ஜிஇ 14-இல் தோற்றோம்.இம்முறை அங்கும் பெரிய வெற்றி கிடைத்துள்ளது”, என நேற்றிரவு தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட பின்னர் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அன்வார் கூறினார்.

நேற்று நடந்து முடிந்த போர்ட் டிக்சன் இடைத் தேர்தலில் அன்வார் 23,560 வாக்குகள் பெற்று தம்மை எதிர்த்த ஆறு வேட்பாளர்களைத் தோற்கடித்தார்.

“போர்ட் டிக்சன் எனக்கு ஒரு புதிய நாடாளுமன்றத் தொகுதி. இந்த ஆதரவு மனத்தை நெகிழ வைத்துவிட்டது. போர்ட் டிக்சனுக்கு நல்லது செய்வோம் என்பதை மட்டும் இப்போது கூறிக் கொள்கிறேன்”, என்றாரவர்.