முதல் சுற்று : சிலாங்கூரில் அஸ்மின் முன்னிலை

பிகேஆர் தேர்தல் | சிலாங்கூர் பிகேஆர் தேர்தல் முதல் சுற்றில், கட்சி துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் ரஃபிசி ரம்லியைப் பின்னுக்குத் தள்ளி, முகமட் அஸ்மின் அலி முதலிடத்தில் உள்ளார்.

இன்று சிலாங்கூரில், 9 தொகுதிகளில் நடந்து முடிந்த வாக்களிப்பில், ரஃபிசி 8,563 வாக்குகள் பெற்ற நிலையில், அஸ்மின் 9,337 வாக்குகள் பெற்று முதலிடத்தில் இருப்பதாக அதிகாரப்பூர்வமற்ற முடிவுகள் கூறுகின்றன.

இன்று சபா பெர்ணம், சுங்கை பெசார், உலு சிலாங்கூர், செர்டாங், கிளானா ஜெயா, சுபாங், காப்பார், கோத்தா இராஜா மற்றும் செப்பாங் தொகுதிகளில் நடந்த தேர்தலில், உலு சிலாங்கூர், கிளானா ஜெயா, காப்பார் ஆகிய மூன்று தொகுதிகளில் ரஃபிசி வெற்றி பெற்றுள்ளார்.

அஸ்மின் சிலாங்கூரின் முன்னாள் பிகேஆர் தலைவராக இருந்த போதிலும், அவர் அங்குக் கடுமையான சவாலையே எதிர்கொள்கிறார்.

நான்கு வெற்றியாளர்கள் தேவைப்படும் கட்சியின் உதவித் தலைவர் பதவிக்கு, சிலாங்கூரில் நூருல் இஸா அன்வார் (8,063 வாக்குகள்) முன்னிலையில் உள்ளார். அவரைத் தொடர்ந்து சேவியர் ஜெயக்குமார் (6,763 வாக்குகள்), ஷுரைய்டா கமாருட்டின் (6,699 வாக்குகள்) மற்றும் எஸ் கேசவன் (5,321 வாக்குகள்) ஆகியோர் உள்ளனர்.

மொத்தத்தில் முன்னிலையில் இருக்கும் நான்கு வேட்பாளர்கள் பின்வருமாறு, நூருல் இஸா (31,599 வாக்குகள்), ஷுரைய்டா (24,650), சேவியர் ஜெயக்குமார் (19,926) மற்றும் தியான் சுவா (19,250).

ஏ.எம்.கே. தலைவர் பதவிக்கு அஸ்மின் தரப்பைச் சேர்ந்த அஃபிஃப் பஹர்டின் 1,876 வாக்குகள் பெற்று, முன்னிலையில் உள்ளார். ரஃபிசி தரப்பைச் சேர்ந்த அக்மால் நசீர் 1,725 வாக்குகள் பெற்றுள்ளார்.

பிகேஆர் மகளிர் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிக்கும் அஸ்மின் தரப்பினரே முன்னிலையில் உள்ளனர். ஹனிஷா தல்ஹா 3,696 வாக்குகளும் டரோயா அல்வி 3,757 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளனர். அதேசமயம், ரஃபிசி தரப்பைச் சேர்ந்த ஃபூசியா சாலே 2,746 வாக்குகளும் ரொட்ஸியா இஸ்மாயில் 2,570 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

பிகேஆர் மொத்த உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் சிலாங்கூரில் உள்ளதால், மூன்று வார இறுதிநாள்களில் அங்கு தேர்தல் நடைபெறும்.

6 தொகுதிகளின் இரண்டாம் சுற்று வாக்களிப்பு, எதிர்வரும் 21-ம் தேதியும், மூன்றாம் சுற்று வாக்களிப்பு 28-ம் தேதியிலும் நடைபெறும்.

இதுவரை பினாங்கு, ஜொகூர், கிளாந்தான், திரெங்கானு, பஹாங் மற்றும் கூட்டரசுப் பிரதேசத்தில் தேர்தல்கள் முடிவுற்றன. அவற்றுள் முதல் மூன்று மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் இறுதி செய்யப்பட்டுள்ளன.