‘#பந்தா 1050’ (குறைந்தபட்ச சம்பளம் RM1050 எதிர்ப்புக் கூட்டணி) ஏற்பாடு செய்யும், குறைந்தபட்ச சம்பளம் RM1050 எதிர்ப்புப் பேரணியை முழுமையாக ஆதரிப்பதாக மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) கூறியுள்ளது.
பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம், எதிர்வரும் ஜனவரி 2019-ல் நடைமுறைக்கு கொண்டுவரவுள்ள RM50 குறைந்தபட்ச சம்பள உயர்வு, தொழிலாளர் வர்க்கத்திற்கு ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளதாக அக்கட்சியின் தலைமைச் செயலாளர் ஆ சிவராஜன், ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஊதிய மதிப்பாய்வுக் குழுவின் அறிக்கையைப் பகிரங்கமாக பொதுமக்களிடம் காட்டும்படி ஹராப்பான் அரசாங்கத்தை பி.எஸ்.எம். அழைப்பதாகவும் அவர் அவ்வறிக்கையில் கூறியுள்ளார்.
“உலக வங்கி ஒப்புதல் அளித்தபடி, குறைந்தபட்ச ஊதியத்தை முன்மொழிந்த சுயாதீனக் குழுவானது RM250 அதிகரிப்பை மகாதிரிடம் முன்வைத்துள்ளது, மகாதிர் அறிவித்த மோசமான RM50-ஐ அக்குழு பரிந்துரைக்கவில்லை என எங்களிடம் தெரிவிக்கப்பட்டது.
“அதுமட்டுமின்றி, சபா மற்றும் சரவாக்குடன் தரப்படுத்தப்பட்டால், குறைந்தபட்ச ஊதியம் RM 1250 அல்லது RM 1170 ஆக இருக்க வேண்டும்,” என சிவராஜன் கூறினார்.
“முதலாளிகள் முன்மொழிந்த, RM50 குறைந்தபட்ச சம்பள அதிகரிப்பை மகாதிர் முழு மனதுடன் ஏற்றுக் கொண்டார்.
“புதிய மலேசியாவில், அரசாங்கத்திற்குச் சொந்தமான ஜிஎல்சி நிறுவனங்களுக்குள் கூட, ஊதிய வேறுபாடுகளை ஏற்றுக்கொள்ளும் ஹராப்பான் அரசாங்கத்தின் செயல் முற்றிலும் வெறுப்பூட்டுவதாக உள்ளது.
“ஒரு மாதத்திற்கு RM100-200 ஆயிரம் என, கற்பனை செய்யமுடியாத அளவுக்குச் சம்பளத்தைப் பெறும் தலைமை நிர்வாக அதிகாரிகள் இன்னமும் இருக்கும் வேளை, தொழிலாளர்களுக்கு RM 1500-ஆக குறைந்தபட்ச ஊதியத்தை அதிகரிக்க அவர்கள் தயங்குகிறார்கள்.
“இதனை எதிர்த்துக் குரல் கொடுக்க, பி.எஸ்.எம். கட்சி உறுப்பினர்கள், தொழிலாளர் இயக்கங்களோடு இணைந்து நாடாளுமன்றம் செல்லவுள்ளனர்.
“எனவே, எதிர்வரும் அக்டோபர் 17-ம் தேதி, புதன்கிழமை, காலை மணி 9.30-க்கு, பாடாங் மெர்போக்கில், அனைவரையும் ஒன்றுகூடுமாறு கேட்டுக்கொள்கிறோம்,” என ஆ சிவராஜன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.