RM1,050 குறைந்தபட்ச ஊதியத்தை மீளாய்வு செய்ய வேண்டும், எம்.டி.யூ.சி. கவன ஈர்ப்புப் பேரணி

எதிர்வரும் ஜனவரி 2019 முதல், அமலாக்கம் காணவுள்ள RM1,050 குறைந்தபட்ச ஊதியத்தை மீளாய்வு செய்யக்கோரி, மலேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ் (எம்டியூசி), ஓர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தவும், பிரதமர் துன் டாக்டர் மகாதிரிடம் மகஜர் ஒன்றைக் கையளிக்கவும் திட்டமிட்டுள்ளது.

அந்த எதிர்ப்புப் பேரணி, எதிர்வரும் அக்டோபர் 17-ம் தேதி, காலை மணி 9.30-க்கு, பாடாங் மெர்போக்கில் தொடங்கி, நாடாளுமன்றம் நோக்கி நகரவுள்ளதாக எம்டியூசி தலைமைச் செயலாளர் ஜெ சோலமன் தெரிவித்தார்.

அந்நாள், வறுமை ஒழிப்புக்கான சர்வதேச தினமாகவும் திகழ்கிறது.

உயர்ந்துவரும் வாழ்க்கைச் செலவினங்களைச் சமாளிக்கச் சிரமப்படும், பி40 குழுவினருக்குச் சற்றும் பொறுந்தாத இந்தக் குறைந்தபட்ச சம்பளத்தை, அரசாங்கம் மீளாய்வு செய்ய வேண்டுமென, 25 அரசு சாரா அமைப்புகளும் இயக்கங்களும் இப்பேரணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் சோலமன் சொன்னார்.

பெர்சத்துவான் சஹாபாட் வனித்தா சிலாங்கூர், தெனாகாநீத்தா, சுவாராம், சபா வூமன் எக்சன் குரூப், சிஸ்டர்ஸ் இன் இஸ்லாம் போன்ற அமைப்புகளுடன் மலேசிய சோசலிசக் கட்சியும் இப்பேரணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக அவர் சொன்னார்.

அரசாங்கம் முதலாளிகளுக்குச் செவிசாய்த்து, தேசிய ஊதிய சட்ட மசோதா தொழில்நுட்பக் குழு மற்றும் எம்டியூசி-இன் பரிந்துரைகளை ஒதுக்கி வைத்தது பாகுபாடுகளைக் காண்பிக்கின்றது என சோலமன் கூறினார்.

“இக்குழு இரண்டு ஆண்டுகளாக ஆய்வு செய்து, அந்த அறிக்கையை அரசாங்கத்திற்குச் சமர்ப்பித்தது. இது நடுநிலை வகித்த தனிநபர்களின் குழு, அவர்களில் பெரும்பாலோர் பேராசிரியர்கள், அவர்கள் முதலாளிகளுக்கோ அல்லது ஊழியர்களுக்கோ சார்பாக இல்லை.

“நாங்கள் குழம்பிப்போய் உள்ளோம், அமைச்சரவை ஏன் எங்களின் ஆலோசனையைச் செயல்படுத்த விரும்பவில்லை? ஆனால் அதற்குப் பதிலாக, முதலாளிகளின் பரிந்துரைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டன,” என்று அவர் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

“இரகசியமானதாகக் கருதப்படும் அந்த அறிக்கையை, அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். மலேசியர்கள் அந்த அறிக்கையின் உள்ளடக்கத்தை அறிந்து கொள்ள வேண்டும். பொதுமக்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது அந்த அறிக்கை. அதனை ஏன் இரகசியமாக வைத்திருக்க வேண்டும்?”

“1எம்டிபி போன்ற ஆவணங்களே அறிவிக்கப்படலாம் என்றால், தேசிய ஊதிய சட்ட மசோதா தொழில்நுட்பக் குழுவின் அறிக்கையை அறிவிப்பதில் என்ன தவறு?” என அவர் கேள்வி எழுப்பினார்.

தற்போதைய நாட்டின் நிதி நிலைமை காரணமாக, குறைந்தபட்ச ஊதியத்தைத் தீர்மானிப்பது, அரசாங்கத்திற்குக் கடினமான நேரம் இது என்ற மகாதிரின் அறிக்கை பற்றி கூறுகையில், தனியார் துறைகள் இலாபம் சம்பாதிப்பதால், அது ஒரு பிரச்சினையாக இருக்காது என்று சாலமன் கூறினார்.

“தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களைப் பற்றி நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். தனியார் நிறுவனங்கள் இலாபம் சம்பாதிக்கிறார்கள், ஆனால் தொழிலாளர்களுக்கு ஓர் அற்ப ஊதியமே கொடுக்கப்படுகிறது. இந்த மக்கள் அரசாங்கத்தை நம்பினார்கள், ஆனால் அவர்களுக்கு RM50 மட்டும் கூடுதலாக வழங்க முடிவுசெய்யப்பட்டபோது, அவர்கள் ஏமாற்றப்பட்டனர்,” என்று அவர் கூறினார்.

கடந்த மாதம் புத்ரா ஜெயா அறிவித்த RM50 குறைந்தபட்ச சம்பள உயர்வை, தேசிய ஊதிய சட்ட மசோதா தொழில்நுட்பக் குழு பரிந்துரைத்ததாக பிரதமரின் அலுவலகம் கூறியிருந்தது. ஆனால், தாங்கள் அதனைப் பரிந்துரைக்கவில்லை என்றும், தாங்கள் சமர்ப்பித்த அறிக்கையை பொதுவில் வெளியிடுமாறும் அக்குழு அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டுள்ளது.