மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம்( எம்ஏசிசி), முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை 1எம்டிபி தொடர்பாக மீண்டும் விசாரணைக்கு அழைத்துள்ளது.
விசாரணைக்காக அவர் காலை மணி 10க்கு புத்ரா ஜெயாவில் உள்ள எம்ஏசிசி தலைமையகம் வந்தார்.
“இது எம்டிபி-யுடன் தொடர்புள்ள ஒரு புதிய வழக்கு. வாக்குமூலம் பதிவு செய்யப்படுவதற்காக அவர் அழைக்கப்பட்டுள்ளார்”, எனத் தகவல் அறிந்த ஒரு வட்டாரம் மலேசியாகினியிடம் தெரிவித்தது.
1எம்டிபி தொடர்பாக நஜிப் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருப்பது இது ஐந்தாவது முறையாகும்.
ஏற்கனவே அவர்மீது 32 குற்றங்கள் சாட்டப்பட்டுள்ளன. அவற்றில் 25 1எம்டிபி தொடர்பானவை.
மேலும் ஏழு, 1எம்டிபி-இன் துணை நிறுவனமான எஸ்ஆர்சி இண்டர்நேசனல் சம்பந்தப்பட்டவை. பணச் சலவை நடவடிக்கை, அதிகார மீறல், நம்பிக்கை மோசடிக் குற்றங்கள் புரிந்ததாக அவர்மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.