டிஏபி பிரதிநிதிகள் விருதுகளைப் பெற்றுக் கொள்வதற்குமுன் அது குறித்து சிஇசி-இடம் தெரியப்படுத்த வேண்டும்

தேர்ந்தெடுக்கப்பட்ட டிஏபி பிரதிநிதிகள் அவர்களுக்கு விருதுகள் வழங்கப்படும்போது அவற்றைப் பெற்றுக் கொள்வதா வேண்டாமா என்று முடிவெடுப்பதற்குமுன் கட்சியின் மத்திய செயல் குழு(சிஇசி)வுக்கு அது பற்றித் தெரிவிக்க வேண்டும்.

அதுதான் கட்சியின் கொள்கை என்று கூறிய டிஏபி தேசிய உதவிப் பொருளாளர் ங்கே கூ ஹாம், கட்சி உறுப்பினர்கள் அவர்களின் சேவைக் காலத்தை முடித்த பின்னரே விருது பெறத் தகுதி பெறுவார்கள் என்றார்.

நேற்றிரவு நடைபெற்ற சிஇசி கூட்டம் அவ்வாறு முடிவு செய்தது என்றவர் சொன்னார்.

“நேற்றைய கூட்டத்தில் அம்முடிவு எடுக்கப்பட்டது.

“எம்பியாக, சட்டமன்ற உறுப்பினராக, ஊராட்சி மன்ற உறுப்பினர்களாக இருப்பவர்கள் இந்த விதிமுறையைப் பின்பற்ற வேண்டும்”.

தனக்கு டத்தோ விருது வழங்கப்பட்டபோதுகூட அவ்வாறே செய்ததாக ங்கே கூறினார்.

“2008-இல் எனக்கு டத்தோ விருது வழங்க முன்வந்தபோது அது பற்றி முதலில் சிஇசி-இடம் தெரிவித்தேன். நானாக அதைப் பெற்றுக்கொள்ளவில்லை”, என்றார்.