நஜிப் மேலும் குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது

முன்னாள் பிரதமர் நஜிப் இரசாக் 1எம்டிபி தொடர்பான இன்னும் அதிகமான குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்வார் என எதிர்பார்க்கப்படுவதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) தெரிவித்துள்ளது.

மலேசியாகினியிடம் பெயரைக் கூற விரும்பாத ஓர் அதிகாரி, ஊழல் எதிர்ப்பு ஆய்வாளர் தற்போது ஒரு புதிய விசாரணை அறிக்கையைத் தயாரித்து வருவதாகக் கூறினார்.

அதன் காரணமாகவே, இன்று காலை, நஜிப்-ஐ எம்ஏசிசி மீண்டும் புத்ராஜெயாவில் உள்ள தலைமையகத்திற்கு அழைத்தது என அவர் மேலும் தெரிவித்தார்.

1எம்டிபி தொடர்பாக எம்ஏசிசி மேற்கொண்ட விசாரணையில், இது ஒரு புதிய தடத்திற்கு இட்டுச்செல்லும். மேலும், விரைவில் அவருக்கு (நஜிப்) எதிராக வழக்குத் தொடரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.”

2009, எம்ஏசிசி சட்டம் 23-ஆம் பிரிவுக்கு உட்பட்ட விசாரணைக்கு உதவுவதற்காக நஜிப் இன்று அழைக்கப்பட்டார் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

சுமார் 7 மணி நேரம் விசாரணை

இன்று காலை, 10 மணியளவில், எம்ஏசிசி தலைமையகம் வந்த நஜிப், சுமார் 7 மணி நேரத்தை அங்குச் செலவிட்டார். பின்னர், வேறு ஒரு வாசல் வழியாக அவர் அங்கிருந்து வெளியேறினார்.

அங்குப் பணியில் இருந்த ரேலா உறுப்பினர் ஒருவர், நஜிப் மாலை மணி 4.30 அளவில் அங்கிருந்து வெளியேறியதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

1எம்டிபி தொடர்பாக, நஜிப் விசாரிக்கப்படுவது இது ஐந்தாவது முறை. இதுவரை அவர் 32 குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளார், அதில் 25 குற்றச்சாட்டுகள் 1எம்டிபி சம்பந்தப்பட்ட பணமோசடி மற்றும் அதிகார துஷ்பிரயோக வழக்குகள் ஆகும்.