சீஃபீல்ட் அருள்மிகு மாரியம்மன் ஆலய சிக்கல்: பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும், வேதமூர்த்தி  

கசகஸ்தான் பயணம் நிறைவு பெற்று நேற்று தாயகம் திரும்பியபோது, சுபாங் ஜெயா, சீ ஃபீல்ட் அருள்மிகு மாரியம்மன் ஆலயம் உடைபடப் போவதாக தகவல் பரவியதன் தொடர்பில் இந்தியச் சமுதாயத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது குறித்து என் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

 அன்றைய தோட்டச் சூழல் மாறி, ஆலயம் அமைந்துள்ள இடமும் தற்பொழுது சிக்கலுக்கு ஆளாகியுள்ள நிலையில் சம்பந்தப்பட்ட ஆலயத்தை ஆகம முறைப்படி வேறு இடத்திற்கு மாற்றுவதற்கும் நிதி உதவிக்கும் நீதிமன்றத்தின் மூலம் வழிபிறந்தாலும் ஆலய நிருவாக மட்டத்தில் ஒருங்கிணைப்பு இல்லாததால், பொதுமக்கள் இடையே, மாறுபட்ட கருத்துகள் சமூக வலைத்தளங்களின் மூலம் பரவிவருவதுடன் பக்தர்களும் ஆலயத்தின்முன் திரண்டுள்ளனர்.

இந்தியச் சமுதாயத்தில் உணர்ச்சியைத் தூண்டி முறுகல் நிலை ஏற்படும் அளவுக்கு இப்படி தகவலைப் பரப்புவது பொருத்தமான செயல் அல்ல; தவிர, இது தொடர்பான அனைத்துத் தரப்பினருடனும் தொடர்பு கொண்டு உண்மை நிலையை அறிந்துவரும் அதேவேளை, எல்லாத் தரப்பினரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய நியாயமான தீர்வை நாங்கள் விரைவில் முன்மொழிவோம். எனவே, இந்திய மக்கள் அனைவரும் அதுவரை அமைதியைக் கடைப்பிட்டித்து பொறுமை காக்க வேண்டும் என்று இதன் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

நக்கீரன்