முன்னாள் பிரதமர் நஜிப் மற்றும் அம்னோவின் பிரச்சாரத்தில் சிக்கிவிட வேண்டாம் என்று, டிஏபி மூத்தத் தலைவர் லிம் கிட் சியாங், கல்வி அமைச்சர் டாக்டர் மஸ்லி மாலேக்கிற்கு ஆலோசனை கூறியுள்ளார்.
“பள்ளி காலுறை மற்றும் காலணிகளைப் பற்றி பேசுவதை நிறுத்துமாறு, கல்வி அமைச்சர் மஸ்லிக்கு நான் ஆலோசனை கூறியுள்ளேன்.
“முன்னாள் பிரதமர் நஜிப் இரசாக் மற்றும் அம்னோவின் சைபர்ட்ரூப்பர் மற்றும் ஆதரவாளர்களின் வலையில் சிக்கிக்கொள்ளாமல் இருக்கவே இந்த ஆலோசனை, ஏனெனில் நாட்டின் கல்வி திட்டங்களில் குறைந்த பார்வை இருப்பது போன்றும், அதனை மேம்படுத்துவதற்கான குறிக்கோளும் நோக்கமும் அவருக்கு இல்லை என்பதுபோல் காட்டவுமே அவர்கள் விரும்புகிறார்கள்,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் குறிப்பிட்டார்.
1995 முதல் 2000-ம் ஆண்டு வரை, அந்தப் பதவியில் இருந்த நஜிப்பைவிட, தான் ஒரு சிறந்த கல்வி அமைச்சர் என்பதை மஸ்லி நிரூபிக்க வேண்டும் என்று லிம் சுட்டிக்காட்டினார்.
“மஸ்லி நவீன தகவல்தொடர்புகளைக் கற்றுக் கொண்டு, நஜிப்பைவிட தான் சிறந்த கல்வி அமைச்சர் என்பதை நிரூபிக்க தனது ஆற்றலை அர்ப்பணிக்க வேண்டும்,” என லிம் கூறினார்.
மஸ்லிக்கு எதிரான நஜிப்பின் அறிக்கை, அவர் சம்பந்தப்பட்டிருக்கும் 1எம்டிபி ஊழல் வழக்கிலிருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்புவதையே நோக்கமாகக் கொண்டது என இஸ்கண்டார் புத்ரி எம்பி-யுமான அவர் சொன்னார்.
‘சினார் ஹரியான்’ பத்திரிக்கையுடனான மஸ்லியின் நேர்காணலில் இருந்து, 1 விழுக்காடு தகவலைக் கொண்டே நஜிப் அறிக்கை விட்டுள்ளார், அவர் பேசிய மற்ற கல்வி சீர்திருத்தங்கள் “முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது” என்று அவர் மேலும் கூறினார்.
முன்னதாக, உத்துசான் மலேசியா வெளியிட்ட, பள்ளிக் காலுறை நிறம் பற்றிய மஸ்லியின் அறிக்கை குறித்து, தனது முகநூலில் நஜிப் கிண்டலடித்து எழுதியிருந்தார்.