மக்களுக்கு சேவை செய்வது டிஎபியின் முதல் கடமையாகும், ‘டத்தோ’ பட்டத்தைத் தேடி அலைவதல்ல என்று டிஎபியின் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் இன்று கூறினார்.
கடந்த காலத்தில் பிஎன் உறுப்பினர்கள் ‘டத்தோ’ பட்டத்தைத் தேடி அலைந்தார்கள். அதைப் போல் ஆவதை டிஎபி விரும்பவில்லை என்றாரவர்.
நான் ஒரு டத்தோ அல்ல. ஆனால் நான் டிஎபியின் ஒரு தலைவராக இவ்வளவு காலம் இருந்துள்ளேன். இந்தச் செய்தியை நாங்கள் அனுப்ப விரும்புகிறோம் என்று நாடாளுமன்ற வளாகத்தில் குவான் எங் செய்தியாளர்களிடம் கூறினார்.
அளிக்கப்பட்ட பட்டங்களை நாங்கள் பாராட்டுகிறோம். நாங்கள் பட்டங்களைத் தேடி அலைகிறோம் என்ற தோற்றத்தைத் தருவதைவிட முக்கியமானது மக்களுக்கு சேவை செய்வதாகும் என்றாரவர்.
“நான் இதை மீண்டும் கூற மாட்டேன். டிஎபியின் கலாச்சாரம் மற்றும் மக்களுக்கான நமது சேவை நிலைநிறுத்தப்பட்டாக வேண்டும். மசீச தலைவர்களைப் போல் ஆகிவிடாதீர், ஏனென்றால் மக்களின் அங்கீகாரம் மிக முக்கியமானது” என்று குவான் எங் மேலும் கூறினார்.
கடந்த வார இறுதியில், கட்சியின் மலாக்கா மற்றும் சாபாவின் மாநில பிரதிநிதிகள் ‘டத்தோ’ பட்டங்களைப் பெற்றதைத் தொடர்ந்து டிஎபி பட்டங்களை நிராகரிக்கும் பிரச்சனை எழுந்தது.
நேற்று, டிஎபியின் அந்தோனி லோக் கட்சியின் சார்பில் இப்பிரச்சனை குறித்து கண்டனம் வெளியிட்டிருந்தார். கட்சி உறுப்பினர்கள் சேவையிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் சிறப்புப் பட்டங்களைப் பெறலாம் என்றார்.