சுபாங் ஜெயா, சீஃபீல்ட் அருள்மிகு மாரியம்மன் ஆலயப் பிரச்சினை தொடர்பாக ‘ஒன் சிட்டி மேம்பாட்டாளர்’ நிறுவனத்தின் துணை நிறுவனமான ‘எம்சிடி பெர்ஹாட்’ சார்பில் அதன் இணை இயக்குநரும் மூத்த அதிகாரிகள் மூவரும் தங்களின் வழக்கறிஞர் ஸ்கிரினுடன் தம்மை புத்ராஜெயா அமைச்சக அலுவலகத்தில் சந்தித்து ஆலோசித்தனர் என்று பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.
ஆலயம் அமைந்துள்ள இடம் தொடர்பாக மேம்பாட்டு நிறுவனம் பெற்றுள்ள நீதிமன்றத் தீர்ப்பு குறித்தும் செல்லப்பா த/பெ காளிமுத்து மற்றும் நாகராஜு த/பெ மேகநாதன் ஆகிய இருவருக்கும் இடையிலான வழக்கு குறித்தும் விரிவாக எடுத்துரைத்தனர்.
மேலும், ஆலய நிருவாகம் தொடர்ந்த வழக்கு, வாதி செல்லப்பா காளிமுத்து பிரதிவாதித் தரப்பினர் நாகராஜு மேகநாதன் மற்றும் ஒன்பது பேர் சம்பந்தப்பட்ட இந்த வழக்கில் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு ஆகியவற்றையும் நாங்கள் பரிசீலித்தோம்.
இடையில், புதிதாக நான்கு பிரதிவாதிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, ஒன் சிட்டி மேம்பாட்டு நிறுவனம், செல்லப்பா காளிமுத்து,சிலாங்கூர் மாநில அரசு, சங்கப் பதிவகம் ஆகியத் தரப்பினருக்கு எதிராக மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களையும் சரிபார்த்ததுடன் ஒன் சிட்டி மேம்பாட்டு நிறுவன பொறுப்பாளர்களிடமும் ஆலோசனை செய்தபின் குறித்த இடத்தை கையகப்படுத்தும் நடவடிக்கையை சற்று ஒத்திவைக்கும்படி மேம்பாட்டாளரை அல்லது உரிமையாளரைக் கேட்டுக் கொண்டதாகவும் அதற்கு இசைவு தெரிவித்த அவர்களிடம் இடைப்பட்ட அவகாசத்தில் மற்ற தரப்பினரிடமும் கலந்து பேசி இந்தச் சிக்கலுக்கு ஒரு சுமூகமான தீர்வை எட்டுவதாகவும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது என்று இதன் தொடர்பில் வெளியிட்ட அறிக்கையில் ஒற்றுமை மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான பொன்.வேதமூர்த்தி மேலும் தெரிவித்துள்ளார்.
-நக்கீரன்