பி.எஸ்.எம். சிவரஞ்சனி : குறைந்தபட்ச சம்பளப் போராட்டம் இன்றோடு முடிந்துவிடவில்லை!

குறைந்தபட்ச சம்பளத்திற்கானப் போராட்டம் இன்றோடு முடிந்துவிடவில்லை, அனைத்து தொழிலாளர்களும் கண்ணியமாக வாழ, நியாயமான சம்பளம் கிடைக்கும் வரை இப்போராட்டம் தொடரும் என மலேசிய சோசலிசக் கட்சியின் (பி.எஸ்.எம்.) தொழிலாளர் பிரிவு ஒருங்கிணைப்பாளர் சிவரஞ்சனி மாணிக்கம் வலியுறுத்தினார்.

இன்று காலை 9.30 மணி அளவில், பாடாங் மெர்போக்கில் கூடிய #பந்தா1050 போராட்டவாதிகள், நாடாளுமன்றம் நோக்கி நடக்கத் தொடங்கினர். நாடாளுமன்றத்தை நெருங்கிய வேளை, அவர்களைத் தடுத்து நிறுத்த முற்பட்ட காவல்துறையினருடன் வாக்குவாதம் நடந்தது. இருப்பினும், இன்றைய எதிர்ப்பு நடவடிக்கை அமைதியான நிலையிலேயே நடைபெற்றது என சிவரஞ்சனி மலேசியாஇன்று-விடம் தெரிவித்தார்.

“தெருவில் இறங்கி, தங்களின் எதிர்ப்பைத் தெரிவிப்பது, ஜனநாயக சமூகங்களில் பொதுவான ஒரு நடைமுறையாகும். மேலும் ‘புதிய மலேசியா’வில், அரசாங்கத்தின் கவனத்திற்கு மக்களுடைய கோரிக்கைகளைக் கொண்டுசெல்ல, மக்களுக்கு அரசாங்கம் ஊக்கமளிக்க வேண்டுமே தவிர, தடுத்து நிறுத்தக்கூடாது,” என அவர் மேலும் சொன்னார்.

RM1050 குறைந்தபட்ச சம்பள உயர்வைக் கண்டித்து பல தொழிற்சங்கங்களும் அரசுசார அமைப்புகளும் இன்று நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்தின.

மலேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ் (எம்டியூசி), சஹாபாட் வணித்தா சிலாங்கூர், சோசியலிஸ்ட் அல்தெனதிஃப், மலேசியா முடா, சுவாரா ரக்யாட் மலேசியா (சுவாராம்), சயா அனாக் மலேசியா (எஸ்.ஏ.பி.எம்.), மக்கள் மேம்பாட்டு மையம் (சிடிசி) போன்ற அரசு சாரா அமைப்புகள் உட்பட, பி.எஸ்.எம். கட்சி மற்றும் பொது மக்களும் இன்று போராட்டத்தில் இறங்கினர்.

எதிர்வரும் 2019 ஜனவரி 1 முதல், தீபகற்ப மலேசியாவில் RM50-ஐ உயர்த்தி, குறைந்தபட்ச சம்பளமாக RM1050-ஐ வழங்கவுள்ளதாக மத்திய அரசு அறிவித்ததை எதிர்த்து, #பந்தா1050 கூட்டணி அமைக்கப்பட்டது.

இந்த RM50 உயர்வானது, நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்காக இதுவரை வியர்வை சிந்திய தொழிலாளர் வர்க்கத்திற்கு ஓர் அவமதிப்பு. எனவே, அதனை மீளாய்வு செய்து, குறைந்தபட்ச சம்பளத்தை மாதத்திற்கு RM1,800-ஆக உயர்த்த வேண்டுமென அக்கூட்டணி அரசாங்கத்திற்குக் கோரிக்கை விடுத்துள்ளது.

அப்பேரணியின் போது பேசிய எம்டியூசி தலைமைச் செயலாளர் ஜெ சோலமன், அரசாங்கம் தங்களின் கோரிக்கைக்குச் செவிசாய்க்கத் தவறினால், கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றாமல் போனால், #பந்தா1015 மீண்டும் நாடாளுமன்றத்தின் முன் போராட்டம் நடத்தத் தயங்காது என்றார்.

இன்று காலை நடந்த பேரணியில், பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பாசீர் கூடாங் எம்பி ஹசான் காரிம் மற்றும் தெப்ராவ் எம்பி ஸ்டீவன் சோங் இருவரும் கலந்துகொண்டு, தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.

அம்னோ-பாரிசான் இதுவரை கூறிவந்த பழையக் கதைகளையே சொல்லி, தற்போதைய அரசாங்கமும் தொழிலாளர்களைப் புறக்கணிப்பதைத் தாங்கள் ஒருபோதும் ஆதரிக்கப் போவதில்லை என அவர்கள் தங்கள் உரையில் தெரிவித்தனர்.