எம்பி: நாடாளுமன்றத்தில் புகைபிடித்தலுக்குத் தடை விதிக்கும் அதிகாரம் அமைச்சருக்கு இல்லை

நாடாளுமன்றத்தில் புகை பிடிக்கக் கூடாது என்று தடைபோட்ட சுகாதார அமைச்சர் டாக்டர் சுல்கிப்ளி அஹமட்மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவைத் தலைவர் முகம்மட் அரிப் முகம்மட் யூசுப்பைக் கேட்டுக்கொண்டனர்.

இன்று கேள்வி நேரத்துக்குப் பின்னர், ஜொகாரி அப்துல் (ஹரப்பான் -சுங்கை பட்டானி) நாடாளுமன்றத்தில் விதிமீறல் நிகழ்ந்திருப்பதைச் சுட்டிக்காட்டினார். நாடாளுமன்ற இல்லத்தில் ஒன்றை அமல்படுத்தும் அதிகாரம் அமைச்சர்களுக்கு இல்லை என்றும் அந்த அதிகாரம் அவைத் தலைவருக்குத்தான் உண்டு என்றும் அவர் கூறினார்.

“இந்த இல்லம் உங்களுடையது. அமைச்சர்களுக்கு இங்கு அதிகாரம் இல்லை. ஒரு அமைச்சர் விருப்பம்போல் அறிவிக்கைகளை ஒட்ட முடியாது. அது பற்றி முதலில் அவைத் தலைவருடன் ஆலோசனை கலக்க வேண்டும்.

“அதன்பின்னர் அவைத் தலைவர் எங்களுக்குத் தெரியப்படுத்துவார். அறிவிக்கைகளையும் அவரே ஒட்டட்டும்.

“அவைத் தலைவர் அவர்களே, எங்களுக்கு நீங்கள்தான் போஸ். அமைச்சர்கள் அல்ல”, என்றார்.

ஜொகாரி கூறியதை இஸ்மாயில் முகம்மட் சைட்(பிஎன் -கோலா குராவ்), பங் மொக்தார் ராடின் (பிஎன் -கினாபாத்தாங்கான்) ஆகியோர் ஆதரித்தனர்.