‘இனப்பாகுபாடு எந்த வடிவில் இருந்தாலும் அவை முற்றாக அகற்றப்பட வேண்டும்’ என்னும் கருத்தின் அடிப்படையில் தேசிய ஒற்றுமைத் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தியின் தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் கடந்த செவ்வாய் இரவு கூட்டம் நடைபெற்றது.
இன பாகுபாட்டை அகற்றும் பன்னாட்டுக் குழுவின் ஒருங்கிணைப்புடன் மனித உரிமை தொடர்பான அரசு சாரா அமைப்புகளின் பங்களிப்புடன் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், பல இன மக்களாக வாழ்ந்தாலும் ஒன்றுபட்ட மலேசிய சமுதாயமாக விளங்கும் தற்போதைய நிலை மேலும் வலுவாகவும் உறுதியாகவும் இருக்க தேவையான கூறுகளைப்பற்றி ஆலோசிக்கப்பட்டது.
நம்பிக்கைக் கூட்டணி தலைமையில் அமைந்துள்ள புதிய அரசின் வெளியு-றவுத் துறை அமைச்சர் டத்தோ சைபுடின் அப்துல்லாவும் இன பாகுபாடு அடியோடு அகற்றப்படுவதற்கான முன்னெடுப்பை பன்னாட்டு அளவில் மேற்கோண்டுள்ள நிலையில் இந்தக் கூட்டம் நடைபெறுவது மிகவும் பொருத்தமானது என்று கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
தவிர, நம்பிக்கைக் கூட்டணியின் தேர்தல் அறிக்கையிலும் குறிப்பிட்டிருந்த படி சமுதாய சமன்பாடு, இனப்பாகுபாட்டை எல்லா நிலையிலும அகற்றுதல், அரசியல் சாசனபடி இன-சமய பேதத்தை குற்றமாக்குதல் குறித்தெல்லாம் இக்கூட்டத்தில் கருத்து பரிமாற்றம் செய்யப்பட்டன.
வெளியுறவு அமைச்சகத்தின் சார்பில் அட்லி ஸக்குவன் மற்றும் ரீசால் அப்துல் ராசாக், தேசிய ஒற்றுமை அமைச்சகத்தில் இருந்து கிருபாகரன், அமைச்சரின் அரசியல் செயலாளர் முனியாண்டி பொன்னுசாமி, சுல்கிப்ளி ஹீஷாம் மற்றும் வே.மாதவன், ‘கோமாஸ்’ அமைப்பின் சார்பில் ரியான் சுவா, ஃபரிஃபெல் மெக்லின், மடிஹா அக்பால், வழக்கறிஞர் மன்றத்தின் சார்பில் சித்தி காசிம் மற்றும் மன்சோர் சாஆட், பேபாஸ் அமைப்பிலிருந்து அஸ்ருல் முகமட் காலிப், ‘புரோஹாம்’ சார்பில் டத்தோ சிவசுப்பிரமணியம், ‘எஸ்டிஜி அலையன்ஸ்’ சார்பில் டாக்டர் லின் முய் கியாங் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனையும் கருத்துப் பரிமாற்றமும் செய்த இந்தக் கூட்டத்தில், கடந்த 2012-ஆம் ஆண்டில் இருந்தே, தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத் துறையுடன் சேர்ந்து ‘இன பாகுபாட்டை அகற்றும் பன்னாட்டுக் குழுவினர் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கு பாராட்டும் வரவேற்பும் தெரிவிக்கப் பட்டது.
நிறைவாக, அமைச்சர் பொன்.வேதமூர்த்தி ஆற்றிய உரையுடன் கூட்டம் முடிந்தது.
– நக்கீரன்