மைபிபிபி தலைவர் பதவியைச் சர்ச்சைக்குரியதாக்கிய, எம் கேவியஸ், இன்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) தலைமையகத்திற்கு வந்தார்.
இன்று மாலை 3.20 மணியளவில், அம்னோ தலைவர் அஹ்மாட் ஷாஹிட் ஹமிடி எம்ஏசிசி வந்து சேர்ந்த 20-ஆவது நிமிடத்தில் அங்கு வந்த கேவியஸ், எம்ஏசிசி அதிகாரியுடன் அலுவலகத்தின் மேல் மாடிக்குச் சென்றார்.
1எம்டிபி நிதி தொடர்பில் விசாரிக்க, எம்ஏசிசி கேவியசை அழைத்துள்ளதாக ‘தி ஸ்டார்’ செய்தி வெளியிட்டுள்ளது.
இத்தகவலை அக்கட்சியின் தலைமைச் செயலாளர், சைமன் சபாபதி உறுதிபடுத்தினார். இன்று காலை, எம்ஏசிசி தொடர்புகொண்டு நிதி ஆவணங்களை கேட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
கேவியஸ் தலைமை பொறுப்பேற்றிருந்த காலத்தில், அம்னோவிலிருந்து மைபிபிபி-க்கு மாற்றிவிடப்பட்ட நிதி தொடர்பில், எம்ஏசிசி விசாரணை நடத்துவதாகவும் அவர் சொன்னார்.
கட்சி நிதி விவகாரங்கள் தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் கேவியசின் தனிப்பட்ட உதவியாளரே கையாண்டு வந்ததாக சைமன் கூறினார்.