ஜாஹிட் மீது 10 நம்பிக்கை மீறல், 27 பணமோசடி குற்றச்சாட்டுகள்

அம்னோ தேசியத் தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி மீது, 10 நம்பிக்கை மீறல் குற்றச்சாட்டுகள், 27  பணமோசடி குற்றச்சாட்டுகள் மற்றும் 8 ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

இன்று காலை, 8.15 மணியளவில், மலேசிய ஊழல் தடுப்பு (எம்ஏசிசி) தலைமையகத்திலிருந்து ஜாஹிட் நீதிமன்றத்திற்குக் கொண்டுவரப்பட்டார்.

தன் மீது சுமத்தப்பட்ட, ‘ஆக்கால்பூடி’ அறக்கட்டளைக்குச் சொந்தமான பணம் தொடர்பில் 10 நம்பிக்கை மீறல் குற்றச்சாட்டுக்கள், RM42 மில்லியன் தொகை தொடர்பில் 8 ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் 72 மில்லியன் ரிங்கிட் தொடர்பிலான 27 குற்றச்சாட்டுகளையும் ஜாஹிட் மறுத்தார்.

RM2 மில்லியன் பிணை

கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம், 45 குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கி இருக்கும் அந்தப் பாகான் டத்தோ எம்பி-க்கு, RM2 மில்லியன் பிணை வழங்க அனுமதித்தது.

நீதிபதி அசூரா அல்வி, இன்று RM1 மில்லியன் வழங்கவும், ஒரு வாரத் தவணைக்குள் மீதமுள்ள தொகையைச் செலுத்தவும் அனுமதித்தார்.

அதுமட்டுமின்றி, அந்த முன்னாள் துணைப் பிரதமர், தனது கடப்பிதழையும் உத்தரவாதத்தின் நிபந்தனையாக ஒப்படைக்க வேண்டுமென நீதிபதி உத்தரவிட்டார்.

இவ்வழக்கு மீண்டும், டிசம்பர் 14-ம் தேதி நீதிமன்றத்திற்குக் கொண்டுவரப்படும்.