அம்னோ துணைத் தலைவர் : ஜாஹிட்-க்கு ஓய்வு தேவை

ஊழல் மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டிருக்கும் அம்னோ தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி கட்சிப் பொறுப்புகளில் இருந்து ஓய்வெடுக்க வேண்டும்.

அம்னோ துணைத் தலைவர், முகமட் ஹசான், அம்னோ 2009 தரநிலை இயக்க நடைமுறையில் (எஸ்.ஓ.பி.) அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளதாக செய்தியாளர்களிடம் இன்று தெரிவித்தார்.

“குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் தலைவர்களைத் தற்காலிகமாக நீக்க அது பயன்படுத்தப்படுகிறது, ஆனால் புதிய எஸ்.ஓ.பி.-இல், அவர்களை விடுமுறையில் செல்லுமாறு கூறப்பட்டுள்ளது.

“எனினும், அவர்கள் குற்றவாளி அல்ல என நிரூபிக்கப்பட்டால், அத்தலைவர்கள் தங்கள் பதவியைத் தொடர முடியும்,” என்று அவர், இன்று காலை 10.20 மணிக்கு கோலாலம்பூர் நீதிமன்ற வளாகத்தில் தெரிவித்தார்.

அம்னோவைக் குற்றம் சாட்டாமல் அல்லது எந்தத் தவறான நடவடிக்கைகளுடனும் தொடர்புபடுத்தக்கூடாது எனும் நோக்கத்தின் அடிப்படையிலேயே இந்த எஸ்.ஓ.பி. உருவாக்கப்பட்டது என அவர் மேலும் தெரிவித்தார்.

கட்சியின் நிர்வாகக் குழுவில் கலந்துபேசியப் பின்னரே, ஒரு முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.