டோல் பிரச்சனை : அமைச்சர் மன்னிப்பு கோரினார்

நாடாளுமன்றம் | பொதுப் பணித்துறை அமைச்சர், பாரு பியான், டோல் சாவடிகள் அகற்றும் பிரச்சனை தொடர்பிலான அவரின் அறிக்கை திமிர்த்தனமாக கருதப்பட்டதால் மன்னிப்பு கோரினார்.

“எனது அறிக்கை …… தலைப்புச் செய்தியில் இடம்பெற்றது, திமிர்த்தனமாகக் கருதப்பட்டதை நான் உணர்கிறேன்.

“நான் அந்த அர்த்ததில் அதனைக் கூறவில்லை. தவறாக அச்சொல்லைப் பயன்படுத்திவிட்டேன். அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

“டோல் சாவடிகளை அகற்ற சொல்லிக் கேட்க மக்களுக்கு உரிமை உண்டு, ஆனால் நாட்டின் நிதி நிலைமை அதனை அனுமதிக்காது, என்றுதான் நான் கூற விரும்பினேன்,” என்று அவர் இன்று சமூக ஊடகத்தில் தெரிவித்தார்.

நாட்டில், கட்டணமில்லா நெடுஞ்சாலை இருக்க வேண்டுமெனக் கனவு காண்பது மக்களின் விருப்பம், ஆனால் தற்போதைய சூழலில், டோல் இல்லாத நெடுஞ்சாலை என்பது கடினமான ஒரு விஷயம் என நேற்று, பொதுப்பணி அமைச்சர், பாரு பியான் கூறியிருந்தார்.

சுமையைக் குறைக்க

“நான் மீண்டும் சொல்கிறேன், அரசாங்கத்தின் கொள்கை தெளிவாக உள்ளது, நாட்டின் நிதிநிலை ஓர் ஆரோக்கியமான நிலைக்குத் திரும்பும்வரை, நாம் டோல் கட்டணத்தை எடுக்க மாட்டோம்.

மக்களின் சுமையைக் குறைக்க, அரசாங்கம் டோல் கட்டணப் பிரச்சனையை ஆராய்ந்து வருகிறது என்றும் பாரு தெரிவித்தார்.

“டோல் கட்டணத்தைக் குறைத்தல், கழிவுகள் வழங்குதல், இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு கட்டணத்தை உயர்த்தாமல் இருத்தல் போன்ற மாற்று வழிகளை நாம் ஆராய்ந்து வருகிறோம்,” என அவர் மேலும் தெரிவித்தார்.

தற்போது கட்டுமானத்தில் இருக்கும், கோத்தா கினாபாலு, பான் போர்னியோ நெடுஞ்சாலையில் டோல் வசூலிக்கப்படாது என்று, கடந்த அக்டோபர் 14-ம் தேதி, பாரு பியான் உறுதியளித்தார்.

முன்னதாக, அக்டோபர் 12-ல், ஒரு நேர்காணலில், கட்டணமில்லாத நெடுஞ்சாலை கட்டமைப்பு என்பது சாத்தியப்படாத ஒன்று எனப் பிரதமர் துன் டாக்டர் மகாதிர் பேசியிருந்தார்.

பக்காத்தான் ஹராப்பான் தேர்தல் அறிக்கையில் உள்ள இலவச நெடுஞ்சாலை உறுதிமொழியில் தனக்கு உடன்பாடில்லை என்றும் டாக்டர் மகாதிர் தெரிவித்தார்.