பினாங்கு, பாயா தெருபோங், ஜாலான் புக்கிட் குக்குஸ்-இல் ஏற்பட்ட நிலச்சரிவில், வெளிநாட்டுத் தொழிலாளர்கள் இருவர் மாண்டனர். ஒருவர் படுகாயத்திற்கு ஆளான வேளை, 10 பேர் மண்சரிவில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
நேற்று மாலை தொடங்கி இன்று மதியம் வரை பெய்த தொடர் கடும் மழையால், இன்று மதியம் 1.56 மணியளவில், புக்கிட் குக்குஸ் இரட்டை நெடுஞ்சாலையில் இருக்கும் கட்டுமானத் தளத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது.
அந்த நிலச்சரிவில், 6 கொண்டேனாக்களும் 1 ‘கொங்சி’யும், சுமார் 50 அடி ஆழத்தில் விழுந்ததாக கூறப்படுகிறது. உண்மையான எண்ணிக்கை இதுவரை தெரியவில்லை.
நிலச்சரிவில் மாண்ட இருவர், வங்காளதேசத் தொழிலாளி, அத்ரூல், 35, உடல் 3.30 மணிக்கும், இந்தோனேசியத் தொழிலாளி சம்சூல் அஸ்மானின், 19, உடல் 5.08 மணியளவில், சுமார் 5 மீட்டர் அடியில், அருகருகே கண்டெடுக்கப்பட்டன.
இரண்டு உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக, பினாங்கு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.