2018-2021 தவணைக்கான துணைத் தலைவர், மூன்று உதவித் தலைவர்கள் மற்றும் கட்சியின் 21 மத்தியச் செயற்குழு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க, மஇகா பிரதிநிதிகள் இன்று மாலை 4 மணி அளவில் வாக்களிக்க உள்ளனர்.
மஇகா துணைத் தலைவர் பதவிக்கு, தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் மத்தியச் செயற்குழு உறுப்பினருமான எம் சரவணனும் பேராக் மஇகா-வின் முன்னாள் தலைவர் எம் இராமசாமியும் போட்டியிடுகின்றனர்.
மூன்று உதவித் தலைவர்கள் பதவிக்கு, இத்தேர்தலில் 10 வேட்பாளர்களுக்கு இடையே கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது.
மஇகா உதவித் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவோரில், முன்னாள் உதவித் தலைவர் டி. மோகன், முன்னாள் இளைஞர் பிரிவுத் தலைவர் சிவராச், நெகிரி செம்பிலான் மாநில முன்னாள் தலைவர் எல் மாணிக்கம் மற்றும் ஜொகூர் மாநில முன்னாள் தலைவர் எம் அசோஜன் போன்றோரும் அதில் அடங்குவர்.
மேலும், 21 மத்திய செயற்குழுவிற்கு 44 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்களில், பி கமலநாதன், என் முணியாண்டி, கே சதாசிவம், ஆர் குணசீலன், எம் மதுரைவீரன், ஜே தினகரன் போன்றோரும் அடங்குவர்.
வாக்குப்பதிவு இரவு 7 மணிக்கு முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனை அடுத்து, இரவு 10 மணியளவில், முடிவுகள் அறிவிக்கப்படலாம் என்று கட்சியின் தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.
கடந்த ஜூன் மாதம், முன்னாள் தலைவர் எஸ் சுப்ரமணியம் ஓய்வுபெற முடிவு செய்தபோது, எஸ்.எ. விக்னேஸ்வரன் கட்சியின் தேசியத் தலைவராகப் போட்டியின்றி தேர்தெடுக்கப்பட்டார்.
-பெர்னாமா