நிலச்சரிவு : தேடும்பணியை எஸ்.ஏ.ஆர். தொடர்ந்தது

கனத்த மழையின் காரணமாக, இன்று அதிகாலை 4.45 மணியளவில் நிறுத்திவைக்கப்பட்ட, ஜாலான் புக்கிட் குக்குஸ் நிலச்சரிவு சம்பவத்தில் புதையுண்டவர்களைத் தேடும் பணியை, தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை குழுவினர் (எஸ்.ஏ.ஆர்.) மீண்டும் தொடங்கினர்.

புத்ராஜெயா தீயணைப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகள் குழுவின் தலைவர் மோர்னி மமாட், இரண்டாவது நாளாக, இன்று காலை 8 மணிக்கு, மீட்பு நடவடிக்கைகள் தொடங்கியதாகக் கூறினார்.

தற்போது ‘உடல் மீட்பு’ நடவடிக்கைகளை எஸ்.ஏ.ஆர். மேற்கொள்வதாகவும், மண் சரிவின் ஆழத்தை அடிப்படையாகக் கொண்டு பார்க்கையில், புதையுண்டவர்கள் உயிருடன் இருப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

“நாங்கள் 3 பிரிவினராக மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளோம். இன்று வானிலை நல்ல நிலையில் இருந்தால், புதையுண்டவர்களைச் சீக்கிரமே கண்டுபிடிக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.

“இன்று அதிகாலை 1.30 மணிவரை, மூன்று உடல்களையும் கடுமையாக காயமடைந்த ஒருவரையும் நாங்கள் மீட்டெடுத்தோம்,” என சம்பவம் நிகழ்ந்த இடத்தில், செய்தியாளர்களிடம் அவர் சொன்னார்.

தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை பணிகளில் பல்வேறு இலாகாக்களைச் சேர்ந்த 143 மீட்பு பணியினர் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.

-பெர்னாமா