நாட்டு மக்களிடம் ஒற்றுமை உணர்வு மிளிர்கிறது, வேதமூர்த்தி

இனம், மொழி, சமயம், பண்பாடு, பால், பருவம், உடற்பேறு, பணி உள்ளிட்ட அனைத்துக் கூறுகளையும் வேறுபாடுகளையும் கடந்து நாட்டு மக்களிடையே ஒற்றுமை உணர்வு மிளிர்கிறது. இத்தகையப் போக்கு மலேசியாவை உலக அரங்கில் இன்னும் உயர்த்தி வைக்கும் என்று தேசிய ஒற்றுமை மற்றும் சமூக மேம்பாட்டுத் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி குறிப்பிட்டார்.

‘ஹெல்ப்’ பல்கலைக்கழகமும்  ‘ரெட் பெர்ரி’ குழுவும் இணைந்து தலைநகரம், பெர்டானா தாவரவியல் புங்காவில் ஏற்பாடு செய்திருந்த ஒற்றுமை ஓட்டத்தை அக்டோபர் 20-ஆம் நாள் காலையில் தொடக்கி வைத்த பிரதமர் துறை அமைச்சருமான அவர், மலேசிய கூட்டு சமுதாயத்தின் அனைத்து நிலைகளையும் சேர்ந்த மக்கள் இப்படிப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

தொடக்கப்பள்ளி மாணவர்கள், இடைநிலைப் பள்ளி மாணவர்கள், உயர்க்கல்வி மாணவர்கள், மூத்த குடிமக்கள், உடற்பேறு குறைந்தவர்கள், வெளிநாட்டினர், பெருநிறுவன பொறுப்பாளர்கள் என அனைத்துப் பிரிவினரும்  நாட்டுப் பற்றையும் மக்கள் ஒற்றுமையையும் வலியுறுத்தும் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது, மக்களிடையே ஒருங்கிணைப்பையும் இணக்கப் போக்கையும் மேலோங்கச் செய்யும்.

நம்பிக்கைக் கூட்டணி அரசின் சார்பில் தேசிய ஒற்றுமைத் துறைக்கு பொறுப்பேற்றுள்ள முதல் அமைச்சர் என்ற வகையில், இந்த ஒற்றுமை ஓட்ட நிகழ்ச்சியைத் தொடக்கி வைப்பது உற்சாகத்தையும் ஊக்கத்தையும் அளிக்கிறது என்று ஏறக்குறைய 1,600 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கூறினார்.

தேச ஒற்றுமையை வலியுறுத்தும் நிகழ்ச்சிகள் கடந்த சுதந்திர மாதத்தில் அதிகமாக நடத்தப்பட்டன. அரசு சார்பிலும் பொது அமைப்புகளின் சார்பிலும் ஏற்பாடு செய்யப்படும் இது போன்ற நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்ட அமைச்சர், அடுத்த ஆண்டு நிகழ்ச்சியில் தானும் ஓட்டத்தில் பங்கேற்க இருப்பதாக செய்தியாளர்களிடம் கூறினார்.

ஹெல்ப் பல்கலைக்கழக துணை வேந்தர் போல் ச்சான் அமைச்சருக்கு நன்றி தெரிவித்தார்.

– நக்கீரன்