டெக்சி ஓட்டுனர்கள் வெளிநடப்பு: பதவி துறக்கத் தயார்- மகாதிர் அறிவிப்பு

பிரதமர் டாக்டர் மகாதிருடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்ற டெக்சி ஓட்டுனர்கள் அவர் கிரேப் வாகனச் சேவையைத் தடைசெய்ய மறுத்ததை அடுத்து வெளிநடப்புச் செய்தனர்.

இன்று காலை லங்காவியில் நடைபெற்ற அக்கூட்டத்தில் 200 பேர் கலந்து கொண்டார்கள். அவர்களில் சிலர் கூட்டத்திலிருந்து வெளியேறியதும் சிறு சலசலப்பு ஏற்பட்டதாக உத்துசான் மலேசியா கூறியது.

டெக்சிகளுக்கும் கிரேப் வாகனச் சேவைக்குமிடையிலான பிரச்னைக்கு புத்ரா ஜெயா ஒரு நியாயமான தீர்வைக் காணும் என மகாதிர் கூறியது அவர்களுக்குப் பிடிக்கவில்லை.

“இப்பிரச்னைக்குத் தீர்வு காண அவகாசம் கொடுங்கள். தடை செய்வது எளிதல்ல.

“எல்லாரும் பிழைக்க வேண்டும். அதற்கேற்ப தீர்வு காணத்தான் ஆசை. ஆனால், எதையும் உறுதியாகச் சொல்ல முடியாது”, என்று மகாதிர் கூறியதாக தெரிவிக்கப்பட்டது.

அவர்களுக்குத் தம்மைப் பிடிக்கவில்லை என்றால் பிரதமர் பதவியிலிருந்து வெளியேறவும் தயார் என்று லங்காவி எம்பி- ஆன மகாதிர் கூறினார்.

“பிரதமராக இருப்பது என் விருப்பமல்ல. நான் ஏற்கனவே பணி ஓய்வு பெற்று விட்டேன்.

“மக்கள் விரும்பி அழைத்தார்கள். திரும்பி வந்தேன். நான் பிரதமராக இருப்பது உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் இன்றே பணிவிலகத் தயார்”, என்றாரவர்.