அஸ்மின்: மின் வாக்களிப்புப் பிரச்னைகளால் கட்சியின் பெயர் கெடுகிறது

பிகேஆர் நடப்புத் துணைத் தலைவர் முகம்மட் அஸ்மின் அலி, கட்சியின் மின் வாக்களிப்பு முறையில் ஏற்படும் பிரச்னைகளால் கட்சியின் பெயர் கெடுவதாகக் கூறினார்.

இன்று சுங்கை துவாவில் வாக்களிப்பைப் பார்வையிட்ட அஸ்மின், மின் வாக்களிப்பில் மீண்டும் பிரச்னைகள் எழாமல் கட்சியின் தேர்தல் குழு உறுதிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

“மின் வாக்களிப்பு முறை இப்போதுதான் முதல்முறையாக பயன்படுத்தப்படுகிறது என்பதால் பல பிரச்னைகளை எதிர்நோக்குகிறோம்.

“எடுத்துக்காட்டுக்கு இன்று காலை 10 மணிக்குத் திறக்கப்பட வேண்டிய வாக்களிப்பு நிலையம் திறக்கப்படவில்லை. பல தொழில்நுட்பக் காரணங்களால் அது திறக்கப்படுவது தாமதமானது.

“இப்படி மீண்டும் நிகழக் கூடாது. அது கட்சி மற்றும் மின் வாக்களிப்பு முறையின் பெயரைக் கெடுக்கிறது”, என்றார்.

தேர்தலில் பண அரசியல் ஊடுருவி இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்துக் கருத்துரைக்குமாறு கேட்டதற்கு அஸ்மின் இவ்வாறு கூறினார்.

“தேர்தலில் பண அரசியல் மட்டுமல்ல, இப்படிப்பட்ட பிரச்னைகளும் உள்ளன. இவற்றையும் நியாயமாக ஆராய வேண்டும்”, என்றவர் சொன்னார்.