கொதிக்க வைக்காத குழாய் நீர் பாதுகாப்பானதா? சுகாதார துணை அமைச்சர் நம்பவில்லை

 

குழாயிலிருந்து நீரை நேரடியாக குடிக்கலாமா? அது பாதுகாப்பானதா? குடிக்கலாம் மற்றும் பாதுகாப்பானது என்பதை சுகாதார துணை அமைச்சர் டாக்டர் லீ பூன் சை நம்பவில்லை.

மாறாக, குழாய் நீரை குடிப்பதற்கு முன்பு அதை முதலில் கொதிக்க வைக்க வேண்டும், ஏனென்றால் அந்த நீர் பழைய மற்றும் துரு பிடித்த குழாய் வழி செல்லும் போது அது மாசு படும் வாய்ப்பு இருக்கிறது என்று டாக்டர் லீ கூறுகிறார்.

நிர்ணயிக்கப்பட்டுள்ள தரத்தை கொண்டிருப்பதால் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து வரும் நீரை அருந்தலாம்.

ஆனால், அந்த நீர் நமது வீட்டை அடைவதற்குமுன் பல நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தூரம் குழாய் வழி செல்ல வேண்டியிருக்கிறது. அந்த நீர் பாதுகாப்பானதா என்பது நமக்குத் தெரியாது என்று அவரை மேற்கோள்காட்டி பெர்னாமா செய்தி கூறுகிறது.

கடந்த புதன்கிழமை, நீர், நிலம் மற்றும் இயற்கை வளங்கள் அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் குழாய் நீர் குடிப்பதற்கு பாதுகாப்பானது என்றும், ஏதாவது பிரச்சனை என்றால் அது அந்த இடத்தைச் சார்ந்ததாகும் என்றும் கூறியிருந்தார்.

மேலும், தாம் குழாயிலிருந்து நீரை நேரடியாக அருந்துவதாக அவர் கூறினார்.

அமைச்சரின் கருத்துக்கு தேசிய நீர் சேவை ஆணையம் (ஸ்பான்) ஆதரவு தெரிவித்தது. சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து வரும் நீர் குடிப்பதற்கு பாதுகாப்பானது என்று அது கூறிற்று.

மலேசியாகினி மேற்கொண்ட ஓர் ஆய்வில் பங்கேற்றவர்களில் 85 விழுக்காட்டினர் குழாயிலிருந்து நீரை நேரடியாக குடிக்க மாட்டோம் என்று கூறினர்.

ஒரு நாள் முழுவதும் நடத்தப்பட்ட ஆய்வில், அது புதன்கிழமை இரவில் தொடங்கியது, மொத்தம் 15,600 பேர் பங்கேற்றனர்.

வடிகட்டப்படாத அல்லது முதலில் கொதிக்க வைக்கப்படாத குழாய் நீரை நாங்கள் அருந்த மாட்டோம் என்று பல சட்டம் இயற்றுவோரும்கூட கூறினர்.