பிகேஆர் தேர்தல் குழுவும் கட்டொழுங்குக் குழுவும் கட்சித் தேர்தலில் தவறு செய்தவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
தேர்தல் வெளிப்படையாகவும் நியாயமாகவும் முறையாகவும் நடத்தப்பட வேண்டும் ஏன்பதுதான் கட்சித் தலைமைத்துவத்தின் உத்தரவு என்று பிகேஆர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அன்வார் இப்ராகிம் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.
“எல்லா வாக்குகளும் அடையாளம் காணப்பட்டுக் கணக்கிடப்பட வேண்டும்.
“கட்டொழுங்கு மீறி நடந்து கொண்டவர்கள் யாராயினும் தேர்தல் குழுவும் கட்டொழுங்குக் குழுவும் கட்சியில் அவர்களின் பதவியைப் பாராமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என்றாரவர்.
கட்சித் தேர்தலில் பெரும்பகுதி பிரச்னை இன்றி திருப்திகரமாக நடந்துள்ளது என்றும் அவர் சொன்னார்.
பிகேஆர் நடப்புத் துணைத் தலைவர் முகம்மட் அஸ்மின் அலிக்கும் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் ரபிசி ரம்லிக்குமிடையில் போட்டி கடுமையாக இருப்பதால் பிகேஆர் கட்சித் தேர்தலில் பதற்றம் மிகுந்திருக்கிறது.
நேற்று சிலாங்கூரின் ஆறு தொகுதிகளில் மூன்றில் குழப்பமும் கூச்சலும் நிலவின. அஸ்மின் மற்றும் ரபிசி ஆதரவாளர்கள் முட்டி மோதிக்கொண்டதுதான் அதற்குக் காரணம் என்று கருதப்படுகிறது.