அனைத்து வகைகளிலும் கல்வியின் தரத்தையும் ஆசிரியர்களின் ஈடுபாட்டையும் உயர்த்த கல்வி அமைச்சு பல நிலைகளில் செயல்படும். அதன் ஈடுபாடு உயர்நிலை சிந்தனைக்கு மட்டும் தலைசாய்க்காமல் கீழ்நிலை மக்களின் ஆலோசனைகளுக்கும் கருத்துகளுக்கும் போதுமான முக்கியத்துவத்தை அளிக்கும் என்று கல்வி அமைச்சர் மஸ்லி மாலிக் உறுதி அளித்தார்.
நேற்றுக் காலை, புத்ராஜெயாவில் தேசியக் கல்வி சீரமைப்பு முணைப்புக்கும் கல்வி அமைச்சுக்கும் இடையே நடந்த சந்திப்பில் கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகளுடன் மஸ்லி கலந்து கொண்டார். நம்பிக்கை கூட்டணியின் கீழ் கல்வித் தரம் சீரமைக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டுடன் தேசிய அளவில் ஒருங்கிணைக்கப்பட்ட கருத்துகள் தாக்கல் செய்யப்பட்டன. இச்சந்திப்பு சுமார் 3 மணி நேரம் நடைபெற்றது.
கல்வி சார்ந்த அமைப்புகளின் சார்பில் 25 நபர்கள் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர். தேசியக் கல்விச் சீரமைப்பு முணைப்பின் துணைத் தலைவர் வழக்கறிஞர் கா. ஆறுமுகம் இக்குழுவுக்குத் தலைமை வகித்தார்.
இந்தச் சந்திப்பின் போது, ஒட்டு மொத்தமாக கல்வியின் தரம் உயர்வடைய நம்பிக்கை கூட்டணி அரசு எந்த அளவுக்குச் செயல்பட வேண்டும் மற்றும் பாலர் கல்வி முதல் உயர்நிலைக் கல்வி வரையில் சீரமைப்புக்கான வழிமுறைகளும் எதிர்பார்ப்புகளும் தாக்கல் செய்யப்பட்டன. இதனை கா. ஆறுமுகம் தாக்கல் செய்தார். அதைத்தொடந்து நடைபெற்ற விவாதங்களுக்கு அமைச்சர் விளக்கமளித்தார்.
அனைத்து தரப்பினருக்கும் தரமான கல்வியும் அதற்கேற்ற வகையில் தரமான ஆசிரியர்களும், கல்வி அமைச்சின் அதிகாரிகளும் பங்காற்ற புதிய வழி முறைகள் கையாளப்படும் என்று அமைச்சர் கோடிகாட்டினார்.
பல்லின மக்களுக்களின் பண்பாட்டு கூறுகள் அற்ற பாடத்திட்டம், பாகுபாடுகள் கொண்ட கல்விக் கொள்கைகள், ஒருதலைப்பட்சமான வரலாற்று பாடங்கள் மற்றும் இதர சமயங்களைப் புறக்கணிக்கும் சமயக்கல்வி போன்றவை பரிசீலிக்கப்படும் என்று அமைச்சர் மேலும் கூறினார்.
துணை அமைச்சராக தமிழர் இல்லை
சீனர்களுக்கு ஒரு துணை அமைச்சர் உள்ள சூழலில், தமிழ்ப்பள்ளிகள் சார்ந்த அனைத்தையும் தானும் துணை அமைச்சர் தியோ நி சிங்-கும் இணைந்து பொறுப்பெடுத்துக் கொள்வதாக அமைச்சர் கூறினார். ஒரு தமிழர்தான் தமிழ்ப்பள்ளிக்குச் செயலாற்ற இயலும் என்ற எண்ணம் மாற வேண்டும் என்றாரவர்.
தமிழ்ப்பள்ளிகள் எதிர்கொண்டுள்ள பலதரப்பட்ட சிக்கல்கள் படிப்படியாக ஆராயப்படும் என்று கூறிய அவர், தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சியைச் சார்ந்தவர்களுக்கு கொடுக்கப்பட்ட கட்டட நிர்மாணிப்பு குத்தகைகள் மறுபரிசீலனை செய்யப்படும் என்றார்.
அனைத்துப் பள்ளிக்கூடங்களும் பாதுகாப்பான சூழலில் உள்ளதா என்பதை கண்டறியவும் அவற்றுக்கான பாதுகாப்பு தகுதி சான்றிதழ் வழங்குவதற்கும் ஒரு குழு அமைக்கப்பட்டு வருவதாக மஸ்லி மேலும் விளக்கமளித்தார்.
தேசிய முன்னணி ஆட்சியில் நஜிப் பிரதமராக இருந்த கால கட்டத்தில் சுமார் ரிம 1 பில்லியன் (100 கோடி) நிதியை தமிழ்ப்பள்ளிகளுக்கு வழங்கியிருந்ததாக முன்னாள் கல்வி துணையமைச்சர் கமலநாதன் கடந்த மார்ச் மாதம் வெளியிட்ட பெர்னாமா செய்தியில் அறிவித்திருந்தார்.
தற்போதுள்ள அரசாங்கம் நிதி பற்றாக்குறை என்ற நிலையில் தனது கருவூலத்தை கட்டிக்காத்து வருகிறது. இந்தச் சூழலில் தமிழ்ப்பள்ளிகளில் ஆரம்பிக்கப்பட்ட சில கட்டுமானப் பணிகள் பூர்த்தியடையாத நிலையில் அல்லல்பட்டு வருகின்றன. இவற்றின் சிக்கல் களையப்படுவதற்கான வழிமுறைகள் ஆராயப்பட்டு வருவதாக தெரிகிறது.