மலைப்பகுதிகளில் நடக்கும் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்தக்கோரும் அழைப்பை வரவேற்பதாக, மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) இன்று ஓர் அறிக்கையில் கூறியுள்ளது.
“அக்டோபர் 19-ல், 7 உயிர்களைப் பலிகொண்ட, புக்கிட் குக்குஸ், சாலை கட்டுமானத் தளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு, மோசமான பணி பாதுகாப்பு மற்றும் சுகாதார நடைமுறைகளின் விளைவாக நடந்தது எனத் தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார தேசிய நிறுவனம் (நியோஸ்) கூறியுள்ளது.”
“ஆக, அக்கட்டுமான நிறுவனம், தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார ஒழுங்குமுறைகளில் தீவிர கவனம் செலுத்தவில்லை என்பது இங்கு தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.
“அதுமட்டுமின்றி, வேலை நிறுத்த உத்தரவைப் பெற்ற பின்னரும் கூட, தொடர்ந்து பணியை மேற்கொண்டது, தொழிலாளர்கள் மீது அந்நிறுவனம் அலட்சியப்போக்குடன் நடந்துகொண்டதைக் காட்டுகிறது,” என்று பி.எஸ்.எம். மத்திய செயலவை உறுப்பினரான இராணி இராசையா கூறினார்.
“பல கட்டுமானத் தளங்களில் ஏற்படும் இறப்புக்கள் பணியிடப் பாதுகாப்பு விதிகளை மீறுவதாலேயே ஏற்பட்டுள்ளன. ஆக, அது ஏன் தொடர்ந்து நடக்கிறது? கட்டுமானத் தொழிலாளர்களின் உயிர் அவ்வளவு மலிவானதா?” என்று இராணி கேள்வி எழுப்பினார்.
“அனைத்து சடலங்களையும் கண்டுபிடிப்பதற்கு முன்னமே, கட்டுமான நிறுவனம், இறந்தவர்கள் அனைவரும் சட்டவிரோதத் தொழிலாளர்கள் என்று அறிவித்தது. இதன்வழி, இறப்புக்கள் மற்றும் காயங்களுக்கு இழப்பீடு வழங்கும் பொறுப்பிலிருந்து விலகிச்செல்ல அது முயல்கிறது.
“நம் அரசாங்கம், வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கொள்கைகளில் கொண்டிருக்கும் இடைவெளிகள் மற்றும் குறைபாடுகளின் காரணமாக, கட்டுமானத் துறை நிறுவனங்கள் ஆவணமற்ற தொழிலாளர்கள் மீதே அதிக ஆர்வம் கொண்டுள்ளது,” என்றார் அவர்.
“ஒரு வெளிநாட்டுத் தொழிலாளி, குறிப்பிட்ட ஒரு கட்டுமான நிறுவனத்தின் கீழ், பணி அனுமதி பெற்று நாட்டில் நுழைகிறார். அந்நிறுவனத்தின் கட்டுமானப் பணி நிறைவடைந்ததும், அத்தொழிலாளி ஆவணமற்றவர் ஆகிறார். அதன்பிறகு, வேறொரு நிறுவனத்தில் அவர் வேலை செய்யும்போது, முறையான ஆவணமற்றவர் அல்லது சட்டவிரோதத் தொழிலாளி ஆகிறார்,” என, பி.எஸ்.எம். அந்நியத் தொழிலாளர் பிரிவு ஒருங்கிணைப்பாளருமான இராணி விளக்கமளித்தார்.
வெளிநாட்டுத் தொழிலாளர்களின் நிலையை மேம்படுத்துவதற்காக, பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் தற்போது பல தரப்பினரிடமிருந்து பரிந்துரைகளைச் சேகரித்து வருவதாகவும் அவர் சொன்னார்.
“என்ன செய்ய முடியும் என்பதற்கான யோசனைகளை விட, தொழிலாளர்களுக்கு மனிதாபிமானமற்றதாக இருக்கும் தொழிலாளர் கொள்கைகளைச் சரியான முறையில், துல்லியமாக அமைக்கும் அரசியல் தைரியம் நமக்கு வேண்டும்,” என அவர் மேலும் கூறியுள்ளார்.
“11-வது மலேசியத் திட்டம், தற்போதைய சூழ்நிலையைச் சீரமைக்க, தேவையான அடிப்படை மாற்றங்களைக் கொண்டிருக்கிறது. முந்தைய அரசாங்கம் அதில் சிறிதும் அக்கறை காட்டாமல், முரண்பாடான பல முடிவுகளை எடுத்தது.
ஆனால், ஹராப்பான் அரசாங்கம் அவ்வாறில்லாமல், பெறப்படும் பரிந்துரைகளில் தீவிரக் கவனம் செலுத்தி, விரைந்து செயல்படும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” என இராணி, அவ்வறிக்கையின் வழி கேட்டுக்கொண்டார்.