அம்னோ உயர்த் தலைவர்கள் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டால் அவர்கள் விடுப்பில் செல்ல வேண்டுமென்ற நிலையான நடைமுறை(எஸ்ஓபி) கட்சித் தலைவர் அஹமட் ஜாஹிட் ஹமிடி-க்குப் பொருந்தாது.
அம்னோ ஆளும் கட்சியின் ஒரு பகுதியாக இருந்தால் மட்டுமே அது பொருந்தும் என்று அம்னோ தலைமைச் செயலாளர் அனுவார் மூசா கூறினார்.
மே 9 பொதுத் தேர்தலுக்குப் பின் அம்னோ எதிர்க்கட்சியாகி விட்டது. அதற்கேற்ப ஒரு புதிய எஸ்ஓபி இனிமேல்தான் வகுக்கப்பட வேண்டும் என்றாரவர்.
“நாங்கள் ஆளும்கட்சியில் இருந்தபோது வேண்டுமானால் அந்த எஸ்ஓபி பொருந்தி இருக்கும்.
“எதிர்க்கட்சியாக உள்ள எங்களுக்கு அது பொருந்தாது. இப்போதுள்ள நிலைமை புதிது. அது பற்றி இனிமேல்தான் விவாதிக்க வேண்டும்”, என்றார்.
கட்சியின் அமைப்பு விதிகளில் இந்நிலை குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை என்பதால் உச்ச மன்றம்தான் ஒரு முடிவெடுக்க வேண்டும் என்று அனுவார் தெரிவித்ததாக நியு ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸ் கூறியது.
ஜாஹிட் ஊழல் மற்றும் நிதி மோசடிகளில் ஈடுபட்டதாக கடந்த வாரம் குற்றஞ்சாட்டப்பட்டிருப்பதால் அவர் விடுப்பில் செல்ல வேண்டியிருக்கும் என்று அம்னோ துணைத் தலைவர் முகம்மட் ஹசான் கூறியிருப்பது குறித்து அனுவார் கருத்துரைத்தார்.