பிகேஆர் மத்திய தேர்தல் குழு(ஜேபிபி), தொழிநுட்பக் கோளாறுகளால் பாதிக்கப்பட்ட ஆறு தொகுதிகளின் தேர்தல் முடிவுகளைச் செல்லாதென அறிவிக்க எண்ணவில்லை எனக் கட்சியின் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுதியோன் இன்று கூறினார்.
“அவர்கள் (ஜேபிபி) பிரச்னையை ஆராய்கிறார்கள். அதன் பின் முடிவெடுப்பார்கள்.
“ஆனால், இப்போதைக்குத் தேர்தல் முடிவுகளைச் செல்லாதென அறிவிக்க அவர்கள் விரும்பவில்லை. தொழில்நுட்பக் கோளாறுக்கான மூலத்தைக் கண்டுபிடிக்க முயன்று கொண்டிருக்கிறார்கள்”, என புத்ரா ஜெயாவில் செய்தியாளர் கூட்டமொன்றில் அவர் சொன்னார்.
நசுதியோன் கூறுவது நேற்று பிகேஆர் தேர்தல் இயக்குனர் ரஷிட் டின் மலேசியாகினியிடம் தெரிவித்ததற்கு முரணாகவுள்ளது. ரஷிட் மலாக்காவில் ஐந்து தொகுதிகளிலும் நெகிரி செம்பிலானில் ஒரு தொகுதியிலும் மறு-தேர்தல் நடத்த வேண்டிய அவசியம் எழலாம் என்று தெரிவித்திருந்தார்.