சபா மாநில அரசு, திருமண வயதைப் பதினெட்டாக நிர்ணயம் செய்துள்ளது. அதேசமயம், சில சந்தர்ப்பங்களில் அதற்கு விதிவிலக்கும் உண்டு.
கடந்த மாநில அமைச்சரவைக் கூட்டத்தில், இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று சபா முதலமைச்சர் முகமட் ஷாஃபி அப்டால் தெரிவித்தார்.
“இதுபற்றி, பிரதமர் துன் டாக்டர் மகாதீர் தலைமைதாங்கிய ஒரு கூட்டத்தில் பேசி முடிவெடுக்கப்பட்டது. நாங்கள் (மாநில அரசு) மத்திய அரசாங்கத்தைப் பின்பற்றி, திருமண வயதை 18-ஆக நிர்ணயிக்க முடிவு செய்துள்ளோம்.
“அதில் சில விதிவிலக்குகளும் உண்டு. சில சூழ்நிலைகளில், உட்புறப் பகுதிகளில் வாழும் சில தனிநபர்கள், ஷரியா அல்லது சிவில் நீதிமன்றத்தின் அனுமதியுடன், 16 வயதில் திருமணம் செய்யும் வாய்ப்பும் உள்ளது,” என்றார் அவர்.
கடந்த சனிக்கிழமையன்று, பிரதமர் மகாதிர், அனைத்து மாநிலங்களும், முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாத அனைவருக்கும், திருமண வயதை 18-ஆக உயர்த்த வேண்டும் எனும் உத்தரவை வெளியிட்டார்.
- பெர்னாமா