பாயா தெருபோங் கட்டுமானத் தளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு, பினாங்கு மாநிலத்திற்கு மற்றுமொரு எச்சரிக்கை, அதனைச் சாதாரணமாக கருத வேண்டாம் என மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) கூறியுள்ளது.
இவ்வாண்டு, பினாங்கு மாநிலத்தில் நிகழ்ந்த இரண்டாவது நிலச்சரிவு இதுவாகும். இதில் தொழிலாளர்களின் உயிர் பலியானது மிகுந்த வருத்தத்தை அளிப்பதாக, பினாங்கு, பாயான் லெப்பாஸ், பி.எஸ்.எம். கிளைத் தலைவர் ச்சூ ச்சூன் காய், நேற்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.
புக்கிட் குக்குஸ், மலைப்பாங்கான பகுதிகளில் கட்டுமானப் பணி மேற்கொள்வது ஆபத்தானது என, பினாங்கு ஃபோரம் போன்ற சமூகக் குழுக்களிடமிருந்து எச்சரிக்கைகள் வந்தபோதிலும், பினாங்கு மாநில அரசு அந்த எச்சரிக்கைகளையும் ஆலோசனைகளையும் தீவிரமாக கவனிக்கத் தவறிவிட்டது என ச்சூ அவ்வறிக்கையில் கூறியுள்ளார்.
“இந்தப் பிரச்சனையை உணர்ந்துகொள்ள, இதுபோன்ற சம்பவங்கள் இனியும் தொடராமல் தடுக்க, பினாங்கு மாநில அரசுக்கு இன்னும் எத்தனை உயிர்கள் பலியாக வேண்டும்?” என அவர் கேட்டார்.
பினாங்கு மாநில மேயரின் கூற்று கவலையை இன்னும் அதிகரிப்பதாக அவர் சொன்னார்.
“பினாங்கு மேயர், யூ தூங் சீயாங், ‘இந்த சாலை கட்டுமானத் திட்டம் என்ன நேர்ந்தாலும் தொடரப்படும்’ (https://www.freemalaysiatoday.com/category/nation/2018/10/22/penang-mayor-says-roadworks-to-continue-despite-landslide/) என்று கூறியிருப்பது எங்களுக்கு மேலும் வருத்தத்தை அளிக்கிறது. இவர் என்ன, தொழிலாளர் உயிரைவிட சாலை நிர்மாணிப்பு மிக அவசியம் என்கிறாரா?
“சாதாரண குடிமக்களின் உயிர்களைக் காட்டிலும், இலாபத்தை அடிப்படையாகக் கொண்ட, ஒரு மேம்பாட்டுத் திட்டத்திற்கு முன்னுரிமை அளிப்பதுதான் பினாங்கு மாநில அரசாங்கம் பின்பற்றிவரும் வளர்ச்சியா?” எனப் பி.எஸ்.எம். மத்திய செயலவை உறுப்பினருமான ச்சூ கேள்வி எழுப்பினார்.
பினாங்கு மாநிலத்தில், மலைச்சரிவுகளில் நடக்கும் அனைத்து கட்டுமானப் பணிகளையும் உடனடியாக நிறுத்துவதோடு, இந்தத் துயரச் சம்பவத்தை விசாரிக்க, ஒரு விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் எனும் தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸின் (பினாங்கு மாநிலக் கிளை) கோரிக்கையைப் பி.எஸ்.எம். ஆதரிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
“போன உயிர் திரும்பி வராது, ஒவ்வொரு உயிரும் முக்கியமானது. மனிதர்களின் நடவடிக்கைகள்தான், இதுபோன்ற சம்பவங்கள் நிகழக் காரணம். இந்த விஷயத்தில் மேம்பாட்டாளர் மட்டுமின்றி, அரசாங்கத்தில் முடிவெடுக்கும் பொறுப்பில் உள்ளவர்கள் மற்றும் சட்டத்தைக் கண்காணித்து, செயல்படுத்தும் பொறுப்பில் உள்ளவர்கள் உட்பட, இந்த மேம்பாட்டுத் திட்டத்தில் ஈடுபட்ட அனைத்து தரப்பினருமே, இத்துயரத்திற்குக் காரணம். அவர்களின் பொறுப்பற்றத் தன்மையினாலேயே, இன்று இந்த 9 உயிர்கள் பலியாகி உள்ளன.”
“எனவே, மலைச்சரிவுகளில் நடக்கும் அனைத்து கட்டுமானப் பணிகளையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், அனைத்து கட்டுமானத் தளங்களிலும் விரைந்து ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் மாநில அரசுக்கு நாங்கள் வலியுறுத்துகிறோம்.
“இத்தகைய துயரங்கள் மீண்டும் தொடராமல் இருக்க, அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், இந்த சோகங்கள் மீண்டும் சம்பவிக்க நாம் அனுமதிக்க முடியாது,” என அவர் மேலும் தெரிவித்தார்.