கிளந்தான் நிதியுதவி கேட்கும் கடிதத்தை குவான் எங் வெளியிட்டார்

நிதி அமைச்சர் லிம் குவான் எங் புத்ரா ஜெயாவிடம் நிதியுதவி கேட்டு கிளந்தான் அரசு எழுதிய கடிதமொன்றை வெளியிட்டார்.

பாஸ் கட்சியால் வழிநடத்தப்படும் மாநில அரசு அதன் ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுக்க முடியாமல் போவிடுமோ என்று அஞ்சி நிதி அமைச்சிடம் ரிம24.5 மில்லியன் கேட்டிருந்தது.

அதில் ரிம22.5 மில்லியன் மட்டுமே கொடுக்கப்பட்டது ஏன் என்று லிம்மிடம் வினவியதற்கு, “அது சம்பளத் தொகை. எனவேதான் அதை விரைவாகக் கொடுத்தோம்”, என்றார்.

“கேட்டதை அப்படியே கொடுப்பது செம்மையான பட்ஜெட் நிர்வாகம் ஆகாது. அதனால்தான் எது அத்தியாவசியமோ அதைக் கொடுத்தோம்”, என்று லிம் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மக்களவையில் கிளந்தானின் நிதி நிலைமை தொடர்பில் நிகழ்ந்த ஒரு வாக்குவாதத்தைத் தொடர்ந்து லிம்மும் பாஸ் தலைவர்களும் அடிக்கடி மோதிக் கொள்கிறார்கள்.

மக்களவையில் நிகழ்ந்தது இதுதான்: தகியுடின் ஹசான் (பாஸ்- கோத்தா பாரு), கிழக்குக்கரை இரயில் இணைப்புத் திட்டம் (இசிஆர்எல் இரத்துச் செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் சொந்த நிதிகளைக் கொண்டு அத்திட்டத்தைத் தொடரலாமா என்று கேட்டார்.

அதற்கு எதிர்வினையாக லிம், கிளந்தானின் நிதி திரட்டும் ஆற்றலில் தமக்கு நம்பிக்கை இல்லை என்றுரைத்து அதற்கு “அரசுப் பணியாளர்களுக்குச் சம்பளம் கொடுப்பதற்குக்கூட பணமில்லை”, என்றார்.