அரசு கருவூலத்தின் முன்னாள் தலைமைச் செயலாளர் இர்வான் செரிகர் அப்துல்லா கடந்த ஜனவரி 2011 லிருந்து ஜூன் 2018 வரையில் அரசு சேவையின் மூலம் மொத்தம் ரிம2,944,095.61 சம்பாதித்தார் என்று நிதி அமைச்சர் லிம் குவான் எங் கூறினார்.
நாடாளுமன்றத்தில் கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங்கின் கேள்விக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் அவர் இதை வெளியிட்டார்.
2011 இல், இர்வான் கருவூலத்தின் துணைத் தலைமைச் செயலாளராக ரிம281,800.43 பெற்றார். 2017இல், கருவூலத்தின் தலைமைச் செயலாளராக அவர் ரிம495,711.45 பெற்றார். 2018 இல், ஜூன் 2018 வரையில், அவர் ரிம230, 048.13 சம்பாதித்தார்.
இத்தகவல் இர்வான் கருவூலத்தின் தலைமைச் செயலாளர் என்ற முறையில் அவர் பெற்ற ஊதியமாகும். இதில் அவர் வாரிய உறுப்பினர் என்ற முறையில் பெற்ற இதர அலவன்ஸ்கள் சேர்க்கப்படவில்லை. அவை அவர் கருவூலத்தின் தலைமைச் செயலாளர் என்ற முறையில் பெற்ற வருமானத்தைவிட மிக அதிகமானதாகும் என்று லிம் அளித்த எழுத்து மூலமான பதிலில் தெரிவித்தார்.
நிதி அமைச்சின் கீழ் இயங்கிய 23 நிறுவனங்களில் 2012 ஆண்டிலிருந்து ஜூன் 2018 வரையில் அந்நிறுவனங்களின் வாரிய உறுப்பினர் என்ற முறையில் இர்வான் ரிம3,867,667.92 வருமானம் பெற்றார் என்று லிம் மேலும் தெரிவித்தார்.
இன்று, முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்குடன் இர்வானும் அபு டாபியைத் தளமாகக் கொண்ட இன்டர்நேசனல் பெட்ரோலியம் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனத்துடன் 1எம்டிபி மேற்மொண்ட நடவடிக்கைகள் குறித்து மேற்கொண்டு விசாரணை நடத்துவதற்காக மலேசிய ஊழல்-தடுப்பு ஆணையத்திற்கு (எம்எசிசி) அழைக்கப்பட்டிருந்தனர்.
பிற்பகல் மணி 3.25 அளவில் இர்வான் எம்எசிசி தலைமையகத்திற்கு வந்து சேர்ந்தார்.