பிகேஆர் கட்சியில் தற்போது நடந்து கொண்டிருக்கும் கட்சி தேர்தலில் வேட்பாளராக போட்டியிடும் ஓர் அமைச்சர் மற்றும் இரு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அக்கட்சியின் புகார்கள், மேல்முறையீடு மற்றும் ஒழுங்குமுறை குழு எச்சரிக்கை கடிதம் அனுப்பியுள்ளது.
அவர்களுக்கு எதிராக புகார்கள் பெறப்பட்ட பின்னர் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நீர், நிலம் மற்றும் இயற்கை வளங்கள் அமைச்சர் சேவியர் ஜெயக்குமார், ஜோகூர் பாரு நாடாளுமன்ற உறுப்பினர் அக்மால் நசருல்லா முகமட் நாசிர் மற்றும் உலுசிலாங்கூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜூன் லியோ ஹிசியாட் ஹூய் ஆகியோரே எச்சரிக்கை கடிதங்கள் பெற்றவர்கள்.
சம்பந்தப்பட்ட மூவருக்கும் எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன என்று பிகேஆரின் ஒழுங்குமுறைக் குழு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகிறது. அதற்கான காரணங்கள் தெரிவிக்கப்படவில்லை. அம்மூவருக்கும் எதிராக கூறப்பட்டுள்ள தேர்தல் குற்றங்கள் பற்றிய புகார்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன என்று மட்டும் அந்த அறிக்கை கூறுகிறது.
அக்மால் வாக்களிப்பு நாளில் உறுப்பினர்களுக்கு “பயிற்சி” அளித்தார் என்று அவருடன் போட்டியிட்ட ரிச்சர்ட் டான் குற்றம் சாட்டியிருந்தார். ஆனால், அக்குற்றச்சாட்டை அவர் மறுத்துள்ளார்.
அக்மாலுக்கு எதிராக எச்சரிக்கை கடிதம் கொடுக்கப்படும் என்று அக்குழு கூறியது. ஆனால் ஜோகூர் பாரு தேர்தல் முடிவு நிலைநிறுத்தப்படும் அக்குழு மேலும் கூறியது.
இதனிடையே, இதற்கு பதில் அளிக்கும் ஓர் அறிக்கையை தாம் வெளியிடப் போவதாக சேவியர் ஜெயக்குமார் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
அந்த ஒழுங்குமுறை குழு கடந்த அக்டோபர் 17-இல் சந்தித்தது. ஆனால் அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை இன்றுதான் வெளியிட்டது.