ஜொகூர் பாரு தீபாவளி சந்தையில், விதிமுறைகளை மீறிய வணிக அமைப்புகளுக்கு அடுத்தாண்டு கடைகள் ஒதுக்கப்படாது என்று ஜொகூர் மாநில மனிதவள, ஒற்றுமை மற்றும் பயனீட்டாளர் விவகாரத்துறை தலைவர் டாக்டர் எஸ் இராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
“இவ்வாண்டு கடைகளுக்கான தெண்டர் விடபட்டபோது, சில நிபந்தனைகளை நாங்கள் அவர்களுக்கு விதித்திருந்தோம். ஆனால், தற்போது அவர்கள் அவற்றைப் பின்பற்றவில்லை என்று எங்களுக்குப் புகார்கள் வந்துள்ளன.
“ஜொகூர்பாரு மாநகர மன்றத்தின் அதிகாரிகள் தீபாவளிச் சந்தையில் கடைகளைக் கண்காணித்து வருகின்றனர். அது உண்மை எனத் தெரியவந்தால், அடுத்தாண்டு நிச்சயமாக, விதிமுறைகளை மீறியவர்களுக்குக் கடைகள் ஒதுக்கப்படாது,” என அவர் திட்டவட்டமாகக் கூறினார்.
கடைகள் ஒதுக்கப்பட்ட 5 அமைப்புகளில் ஒன்று, பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசிகளுக்குக் கடைகளை வாடகைக்குக் கொடுத்துள்ளதாக புகார்கள் வந்துள்ளன என்று டாக்டர் இராமகிருஷ்ணன் மலேசியாஇன்று-விடம் கூறினார்.
“இவ்வாண்டு தீபாவளி சந்தையில் வெளிநாட்டினருக்குக் கடைகளை வாடகைக்குக் கொடுக்கக்கூடாது என்று முன்னமே நாங்கள் தெரிவித்திருக்கிறோம். அதற்கு இணக்கம் தெரிவித்த அமைப்புகளுக்கே நாங்கள் அனுமதி கொடுத்தோம். ஆனால், இப்போது அதனைச் சிலர் மீறியுள்ளனர்.
“தீபாவளி கொண்டாட்டத்திற்கு இன்னும் சில தினங்களே எஞ்சியிருப்பதால், அவர்களைத் தொந்தரவு செய்ய விரும்பவில்லை. ஆனால், அடுத்தாண்டு சம்பந்தப்பட்ட அந்த அமைப்புக்கு கடைகள் கொடுக்கப்படாது,” என்று அவர் சொன்னார்.
ஒருசிலர் இம்முறை எதன் அடிப்படையில் தெண்டர்கள் விடப்பட்டன என்று கேள்வி எழுப்பியுள்ளது பற்றி கேட்டபோது, “இவ்வாண்டு, கடைகளுக்காக 12 தெண்டர்கள், பல்வேறு அமைப்புகளிடமிருந்து வந்தன, அவற்றுள் சிறு, நடுத்தர தொழில்களில் தொடர்புடைய 5 அமைப்புகளுக்கு மட்டும் அனுமதி அளித்தோம்.
“மற்றபடி வேறு எந்தப் பிரச்சனையும் இவ்வாண்டு இல்லை. அனைத்தும் சுமூகமாகவே உள்ளது.
நவம்பர் 1-ம் தேதி, ஜொகூர் பாரு மாநகர ஆளுநர், அம்ரான் ரஹ்மான் தீபாவளி சந்தைக்கு வருகை தரவுள்ளதாகவும் இராமகிருஷ்ணன் தெரிவித்தார்.