பினாங்கில் பாயா தெரோபோங், ஜாலான் புக்கிட் குக்குசில் நிகழ்ந்த நிலச் சரிவுக்கான காரணத்தைக் கண்டறிய மாநில அரசு சிறப்புக் குழு ஒன்றை அமைத்துள்ளது.
சிறப்புக் குழுவை அமைக்க இன்று காலை நடைபெற்ற மாநில ஆட்சிக் குழுக் கூட்டத்தில் ஒருமனதாக ஒப்புக்கொள்ளப்பட்டதாக முதலைமைச்சர் செள கொன் இயோ கூறினார்.
அச்சம்பவத்துக்கான காரணத்தையும் அதற்குப் பொறுப்பானவர்களையும் அக்குழு அடையாளம் காணும் என்றாரவர்.
“அச்சிறப்புக் குழுவுக்கு மாநில துணை முதலமைச்சர் 1 அஹமட் ஜாகியுடின் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்குவார். ஆட்சிக் குழு உறுப்பினர் சைரில் ஜொகாரி, மாநிலச் செயலகத்தின் ஒரு பொறியாளர், மலேசிய பொறியாளர் கழகத்தின் பேராளர் ஒருவர் அதன் உறுப்பினர்கள்”, என்றவர் சொன்னார்.
ஏற்கனவே, பணியிடப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை(டோஷ்), கட்டுமானத் தொழில் மேம்பாட்டு வாரியம் (சிஐடிபி), பினாங்கு நகராட்சி மன்றம் ஆகியவை உள்பட பல தரப்புகள் நிலச் சரிவுக்கான காரணத்தை ஆராய்ந்து வருவதாகவும் அவற்றுடன் சேர்ந்து இச்சிறப்புக் குழுவும் பணியாற்றும் என்று செள கூறினார்.