கூட்டரசு நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட நாடற்ற சிறார்கள் ஐவரின் வழக்கில் இருவருக்கு குடியுரிமை வழங்கப்பட்டது. இருவரில் ஒருவர் 18 வயது சிறுவர் மற்றவர் 13 வயது சிறுமி.
மற்ற மூவரின் குடியுமை விண்ணப்பங்களை உள்துறை அமைச்சும் தேசிய பதிவுத் துறையும் பரிசீலனை செய்யும். அவர்களில் ஒருவரிடம் கூடுதல் விவரங்கள் கோரப்பட்டுள்ளன. மற்ற இருவரும் கூட்டரசு அரசமைப்பு பிரிவு 15ஏ-இன்கீழ் விண்ணப்பம் செய்ய வேண்டும்.
சட்டப் பிரிவு 15ஏ, 21வயதுக்குக் குறைந்தவர்களுக்குச் சிறப்பான சூழலில் குடியுரிமை வழங்கலாமா கூடாதா என்பதை அதன் விருப்பப்படி தீர்மானிக்கும் உரிமையை அரசாங்கத்துக்கு அளிக்கிறது.
அங்கு மூவரின் முயற்சிக்கு வெற்றி கிடைக்கவில்லை என்றால் அவர்களின் மனுவை நவம்பர் 26-இல் ஒன்பது நீதிபதிகள் அமர்வு விசாரிக்கும்.