பிகேஆரின் நெகிரி செம்பிலான் சட்டமன்ற உறுப்பினர் முகம்மட் நசருடின் சப்து “மர்ம நோயால்” பாதிக்கப்பட்டிருக்கிறார். அவரின் உதவியாளர் செய்வினைக் கோளாறுதான் காரணம் என்கிறார்.
“மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம். மருத்துவர்கள் அவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறினர்.
“ஆனால், ஐந்து இடங்களில் பாரம்பரிய சிகிச்சைக்குச் சென்றதில் செய்வினைக் கோளாறாக இருக்கலாம் என்றனர்”, என அமினுடின் முகம்மட் யூனுஸ் கூறியதாக த ஸ்டார் அறிவித்துள்ளது.
பிலா சட்டமன்ற உறுப்பினர் மே 9 பொதுத் தேர்தல் முடிந்த சில நாள்களில் நோய்வாய்ப்பட்டார் என அவரின் சிறப்பு அதிகாரி தெரிவித்தார்.
அவரால் உணவு உண்ண முடியாமல் போனது, பசி எடுப்பதில்லை. பாரம்பரிய சிகிச்சை செய்துகொண்ட பின்னர் நிலைமை மேம்பட்டது என்றாரவர்.
நெகிரி செம்பிலான் ஆட்சிக்குழு உறுப்பினரான 62-வயது முகம்மட் நசருடின் அதிகாரப்பூர்வ நிகழ்வுகளில் காணப்படுவதில்லை என்றும் அண்மைய சட்டமன்றக் கூட்டத்தில்கூட அவர் கலந்து கொள்ளவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நோயின் காரணமாக அவர் பிகேஆர் தேர்தல்களில்கூட போட்டியிடவில்லை. முன்பு அவர் கோலா பிலா தொகுதித் துணைத் தலைவராக இருந்தார்.