ஷாபி: ‘மடத்தனமான’ குற்றச்சாட்டுகள், எதிர்கொள்வது எங்களுக்கு எளிது, நிரூபிப்பது அவர்களுக்குச் சிரமம்

மூத்த வழக்குரைஞர் ஷாபி அப்துல்லா தம் கட்சிக்காரரான முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்மீது சுமத்தப்பட்டுள்ள புதிய குற்றச்சாட்டுகளை விளையாட்டுத்தனமாகவே ஊதித் தள்ளிவிடலாம் என்கிறார்.

ஆனால், குற்றச்சாட்டுகளை நிரூபிக்க அரசுத்தரப்பு மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும், ஏனென்றால் அவை இட்டுக்கட்டப்பட்ட குற்றச்சாட்டுகள் என்றாரவர்.

“இந்த வழக்கில் எதிர்த்தரப்புக்கு ஒரே கொண்டாட்டமாக இருக்கும், திண்டாட்டம் அரசுத்தரப்புத்தான் .

“நான் நினைக்கிறேன் ஏஜிசி (சட்டத்துறைத் தலைவர் அலுவலகம்) குற்றச்சாட்டுகளை ‘இட்டுக்கட்டியுள்ளது’ என்று. அது சரியான முட்டாள்தனம்”, என்று ஷாபி கோலாலும்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்துக்கு வெளியில் செய்தியாளர்களிடம் கூறினார்.

கொண்டுவரப்பட்ட குற்றச்சாட்டுகள் நிதி அமைச்சரும் (நஜிப்) கருவூல தலைமைச் செயலாளரும் (இர்வான் சரிகார்) எடுத்த ஒரு முடிவு தொடர்பானவை என்று ஷாபி விவரித்தார்.

“ஆறு குற்றச்சாட்டுகளும் குறிப்பிட்ட நோக்கத்துக்காக செய்யப்பட்ட ஒதுக்கீடு இன்னொரு முக்கியமான நோக்கத்துக்காக பயன்படுத்திக் கொள்ளப்பட்டதாகக் கூறுகின்றன.

“இந்த வகைக் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வது வேடிக்கையாக இருக்கும்”, என்றாரவர்.

இர்வான் பல்வேறு குழுக்களுடன் ஆலோசனை கலந்த பின்னர்தான் குறிப்பிட்ட நோக்கத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதியை அவரசமாகக் கவனிக்கப்பட வேண்டிய வேறொரு நோக்கத்துக்காக பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்தார் என்று ஷாபி விளக்கினார்.

எதற்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டுமோ அதற்கு அந்த ஒதுக்கீடு பயன்படுத்திக் கொள்ளப்பட்டிருக்கிறது.

அதற்காக, முதலில் நிதி எதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டதோ அந்த நோக்கம் மறக்கப்பட்டதாக பொருள்படாது. அதற்குத் தொடர்ந்து நிதி ஒதுக்கப்படும் என்றாரவர்.